7 துறைகளில் மோசமான நிதி மேலாண்மையால் கோடிக்கணக்கில் வீண் செலவு- சிஏஜி

author img

By

Published : Sep 14, 2021, 10:43 AM IST

cag-report-find-that-seven-department-maintain-the-poor-financial-management

தமிழ்நாட்டில் உயர்கல்வி, ஊரக உள்ளாட்சி உள்ளிட்ட 7 துறைகளில் மோசமான நிதி மேலாண்மையினால் கோடிக்கணக்கில் வீண் செலவு ஏற்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: 2019 - 20ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு மீதான தணிக்கை அறிக்கை நேற்று(செப். 13) சட்டப்பேரவையில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை சார்பாக சமர்ப்பிக்கப்பட்டது.

உயர் கல்வித் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட 7 துறைகளின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சலையில் உள்ள முதன்மை கணக்காய்வு அலுவலகத்தில் முதன்மை கணக்காய்வு தலைவர் அம்பலவாணன் செய்தியாளர்களை சந்தித்து இந்த அறிக்கையில் உள்ள முக்கியமான தணிக்கை முடிவுகள் குறித்து பேசினார்.

அப்போது, "மாநிலம் முழுவதும் அரசு கல்லூரிகளில் 5 ஆயிரத்து 590 ஆசிரியர் பணியிடங்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 51 விழுக்காடு காலியாக உள்ளது.

தமிழ்நாட்டில் கல்லூரிகளின் அடர்வு உயர்கல்விக்கு உரிய வயது கொண்ட ஒரு லட்சம் மாணவர்களுக்கு இந்திய அளவில் சராசரி 28 கல்லூரிகள் என்பதை விட 35 கல்லூரிகளாக உள்ளது. எனினும், தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கல்லூரி அடர்த்தி அனைத்திந்திய சராசரியை விட குறைவாக இருந்தது. நீலகிரி, திருப்பூர், திருவாரூர் மாவட்டங்களில் முறையே கல்லூரி அடர்த்தி ஒரு லட்சம் மாணவர்களுக்கு 13, 15 மற்றும் 16 என மிகக் குறைந்த அளவில் காணப்பட்டது.

சென்னை பல்கலைக்கழகத்திற்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை. சென்னை கிண்டியிலுள்ள கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பாம்பு கடி மருந்து உற்பத்தியை மீண்டும் தொடங்க முழுமையான தொழில்நுட்ப மற்றும் நிதி வகையில் சாத்தியக்கூறு ஆய்வை நடத்தாமல் நிதி பெறும் வழியை உறுதி செய்யாமாலும் தொடங்கியதால் ரூ. 16.77 கோடி பயனற்ற செலவு ஏற்பட்டுள்ளது.

மேலும், வழிகாட்டுநெறிமுறைகளை விவசாயத்துறை சரியாக அமல்படுத்த தவறியதில் மானிய வகையில் செய்யப்பட்ட ரூபாய் 3.01 கோடி செலவு பயனற்றதாகியுள்ளது. அதே போல் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உயிரி தொட்டி அமைப்பதில் மோசமான திட்டமிடல் மூலம் 4.44 கோடி ரூபாய் பயனற்ற செலவாகியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: வெளியானது சிஏஜி அறிக்கை: நெருக்கடியில் அதிமுக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.