ETV Bharat / city

'கமலாலய பெட்ரோல் குண்டுவீச்சில் கூட்டுச்சதி - ரவுடியின் பின்னணியில் யார்? தேவை என்ஐஏ விசாரணை!'

author img

By

Published : Feb 10, 2022, 1:05 PM IST

தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டுவீசிய வழக்கை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்க வேண்டும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கைவைத்துள்ளார்

bomb blast incident
bomb blast incident

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக அண்ணாமலை கமலாலயத்தில் செய்தியாளரைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "இன்று காலை அடையாளம் தெரியாத நபர் பாஜக அலுவலகத்தில் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் தெரிவித்தோம், இது தொடர்பாக காவல் துறை ஒருவரை கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எஃப்.ஐ.ஆருக்கு முன் சுத்தம் செய்தது ஏன்?

அப்படி கைதுசெய்யப்பட்டவர் ரவுடி, பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர். இப்படிப்பட்ட ஒருவர் நீட் தேர்வுக்காக குண்டு வீசியுள்ளார் என்று தெரிவிப்பது நகைச்சுவையாக இருக்கிறது. மேலும் இதை எப்படி ஏற்றுக்கொள்வது, இந்தச் செயலை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இதுபோன்று பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட சதி என்பதால் தேசிய புலனாய்வு முகமை (NIA) உள்ளே வந்து யார் செய்தார்கள்? எதற்காகச் செய்தார்கள்? என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

பெட்ரோல் குண்டுவீசிய இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பதற்கு முன்பாக முதல் தகவல் அறிக்கைப் (எஃப்.ஐ.ஆர்.) பதிவுசெய்வதற்கு முன்பாக காவல் துறை சம்பவ இடத்தைச் சுத்தப்படுத்தியது ஏன்? ஆளுங்கட்சி யாரை வைத்து மிரட்டினாலும் பாஜக தேர்தல் பணியை நிறுத்திவிட முடியாது.

பாஜக வளர்வதை ஆளுங்கட்சியால் ஏற்க முடியவில்லை

மேலும் பெட்ரோல் குண்டு வீசிய நபருக்கும் கல்விக்கும் பல்லாயிரம் கணக்கு மைல் தூரம் இருக்கும். காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஒரு கட்டுக்கதை, இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரவுடிகளுக்கு வாழ்வு கிடைத்துள்ளது.

முதலமைச்சரின் உரையைக் கேட்டு ரவுடிகள் மகிழ்ச்சியாக வளர்ந்துவருகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அனைத்துப் பகுதிகளிலும் மிக வேகமாக பாஜக வளர்ந்துவருகிறது. இதனை ஆளுங்கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதான் இதுபோன்று தொடர்ந்து பாஜக மீது தாக்குதல் நடைபெறுகிறது.

குற்றவாளி சொல்லும் காரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்தவொரு உள்நோக்கமும் இல்லாமல் ஒரு கட்சி அலுவலகத்தில் இதுபோன்ற குண்டை வீச முடியாது. தனி நபர் ஒருவரால் இந்தச் சம்பவத்தில் ஈடுபட முடியாது.

தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் உளவுத் துறை

அவருக்கு நீட் என்கிற சொல்லின் முழு விளக்கமும் தெரியுமா என்றுகூட தெரியவில்லை. முதலில் டாஸ்மாக் வேண்டாம் என்று அவர் குண்டுபோட்டதாகக் கூறுகிறது காவல் துறை, ஆனால் நேற்றைய தினம் குடித்துவிட்டு வந்துள்ளதாகக் கூறுகின்றனர். இது திரைப்படத்தில் வரும் கிளைமேக்ஸ்போல் உள்ளது.

முதலமைச்சர் இதில் கவனம் கொடுத்து இதனை நிறுத்தவில்லை என்றால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. இதற்கு முன்பிருந்த அரசில் காவல் துறை சரியான வகையில் நடவடிக்கை எடுத்துவந்தது. ஆனால் தற்போது அதுபோல் இல்லை. காவல்துறை மீது அதிக அழுத்தம் உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே உதாரணம்.

மேலும் இந்த அரசு என்னுடைய தொலைபேசியை ஒட்டுக்கேட்கிறது. அது மட்டுமின்றி Y-யாக இருந்தால் பாதுகாப்பு என X-ஆக மாற்றியது. வீட்டுக்குப் பாதுகாப்பு இருந்தவர்கள் மாற்றினார்கள், கட்சி அலுவலகத்தில் இரண்டு பக்கமும் இருந்த பாதுகாப்பு எடுக்கப்பட்டது. எந்த அடிப்படையில் உளவுத் துறை இதையெல்லாம் செய்தது என்று தெரியவில்லை.

காவல் துறைக்குத் தலைமை டிஜிபியா, ஏடிஜிபியா?

தமிழ்நாடு உளவுத் துறை அதிகாரம் இல்லாமல் ( illegal) தொலைபேசியை ஒட்டுக் கேட்கிறது. என்னுடைய தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவது குறித்து, புகார் அளிக்க உள்ளோம். இப்படி இருக்கும் நிலையில் அவர்கள் தேசியத் தலைவர்களைக் குற்றஞ்சாட்டுவது எப்படி நியாயமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் ஏடிஜிபி காவல் துறையின் தலைமையாகச் செயல்படுகிறார். டிஜிபி தலைமையாக இருக்க வேண்டிய இடத்தில் ஏடிஜிபி இருப்பதால் மிகவும் மோசமான நிலைக்கு காவல் துறை மாறியுள்ளது.

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் உள்ளிட்ட சில சம்பவங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். வன்முறையைக் கையாளுவதாக இருந்தாலும் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கமலாலயம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.