ETV Bharat / city

‘சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகார்களில் உடனடி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ -  உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

author img

By

Published : Jul 25, 2022, 10:06 PM IST

Action
Action

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தனது 17 வயது மகள், 2021ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாகவும், அவரை மீட்டுத் தரக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறுமியை வேப்பூர் அருகே மீட்டுள்ளதாகவும், குழந்தைகள் நலக்குழு முன் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது மகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறவில்லை எனவும், மருத்துவ பரிசோதனை நடத்தவில்லை எனவும் கூறி, அவர் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், இந்த வழக்கில் போலீசார் போக்சோ சட்டப்படியும், குற்ற விசாரணை முறைச்சட்டப்படியும் செயல்படவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மேலும், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக பெண் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற வேண்டும் எனவும், மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் விதிமுறைகள் வகுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த விதிமுறைகளையும், போக்சோ சட்ட விதிகளையும் பின்பற்ற வேண்டும் என அனைத்து போலீசாருக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம் - உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.