14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை - அமைச்சர் ஆலோசனை

author img

By

Published : May 11, 2022, 8:02 PM IST

14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரசு போக்குவரத்துக் கழகங்களின் நாளை (மே12) நடைபெற உள்ள போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குறித்து அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை: அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் தலைமையில் இன்று (மே11) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேருந்துகள் இயக்கம் குறித்தும் மகளிருக்கான இலவச பயணத்தை மேம்படுத்துவது குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதற்கு அலுவலர்கள் பதில் கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் சாதாரணக் கட்டண பேருந்து அறிவிப்புக்கு முன்னர் (அதாவது 07.05.2021-க்கு) சாதாரண கட்டண பேருந்துகளின் எண்ணிக்கை 5,865 ஆகவும், தற்போது 7,321 ஆகவும் அதிகரித்து மகளிர் பயணம் செய்யும் வகையில் உள்ளது.

மகளிர் கட்டணமில்லாத பயணம்: தற்போது, அதிக மகளிர் எளிதில் பயணம் செய்யும் வகையில் உள்ளது. தற்போது அதிக மகளிர் கட்டணமில்லாத பயணம் செய்கின்றனர். சாதாரண கட்டண பயணிகளில் மகளிரின் பங்கு 40 விழுக்காட்டிலிருந்து 62 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மே 10, 2022 வரை 110.37 கோடி மகளிர் பயணம் செய்துள்ளனர்.

மேலும், தற்போது 2022-23 ஆண்டிற்கான சட்டசபையில் அறிவித்துள்ள அறிவிப்புகளில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை மற்றும் பணப் பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை அறிமுகப்படுத்துதல், பயணக்கட்டணச் சலுகை அனுமதி சீட்டுகளை வலைத்தளம் வாயிலாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை: அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் பொதுவாக ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் அமைத்தல், மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகரங்களில் உள்ள 16 பேருந்து முனையங்களில் (LED) தகவல் பலகை மூலம் இணையவழி பயணியர் தகவல் ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயண சுமைப் பெட்டிகள் வாடகைக்கு விடுதல், இணையவழியாக முன்பதிவு செய்யும் இருவழி பயணச்சீட்டுகளுக்கு 10 விழுக்காடு கட்டண சலுகை அறிமுகப்படுத்துதல், 5 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதித்தல், திருச்சி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரத்தில் அதிநவீன தொழிற்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி மையம் அமைத்தல் ஆகியவற்றை விரைவில் போக்குவரத்துக் கழகங்களில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பயண கட்டணம் தவிர்த்த இதர வருவாயினை பெருக்குவதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளவும், பணிமனைகளில் சோலார் ஒளி பலகைகள் அமைத்து மின்சாரம் தயாரித்தல், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக” தெரிவித்தார்.

இதையும் படிங்க: பட்டியல் இனத்தவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.