ETV Bharat / business

'நீங்க செய்றது தப்பு' - ஏர்டெல், வோடஃபோன் திட்டங்களுக்கு தடைவிதித்த டிராய்

author img

By

Published : Jul 13, 2020, 5:45 PM IST

Vodafone Idea and Airtel
Vodafone Idea and Airtel

டெல்லி: ஏர்டெல், வோடஃபோன் நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையில் சில முன்னுரிமைகளை அளிக்கும் வகையில் அறிவித்திருந்த திட்டத்திற்கு டிராய் தடைவிதித்துள்ளது.

இந்திய டெலிகாம் துறை ஜியோவின் வருகைக்குப் பின் கடும் போட்டியைச் சந்தித்துவருகிறது. ஜியோ அறிவித்த பல அதிரடி ஆபர்கள் காரணமாக ஏர்செல், டோகோமோ உள்ளிட்ட நிறுவனங்கள் திவாலாகின. ஜியோவின் வருகையால் ஏற்பட்ட கடும் போட்டியைச் சமாளித்து, வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திவருகின்றன.

அதன்படி, மாதந்தோறும் 499 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் அனைவரும் பிளாட்டினம் வாடிக்கையாளர்களாகக் கருதப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு 4ஜி சேவையில் சில முன்னுரிமைகள் அளிக்கப்படும் என்றும் ஏர்டெல் அறிவித்திருந்தது.

அதேபோல, வோடஃபோன்-ஐடியா நிறுவனமும் ரெட் எக்ஸ் (REDX) என்ற போஸ்ட்பெய்டு திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. அதன்படி, மற்ற வாடிக்கையாளர்களைவிட இத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு 50 விழுக்காடு கூடுதலான வேகத்தில் இணைய சேவைகள் கிடைக்கும். மேலும் சர்வதேச ரோமிங், அளவற்ற டேட்டா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இத்திட்டத்தில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா நிறுவனங்களின் இந்த ப்ரீமியம் திட்டங்கள் விதிமுறைக்கு எதிராக உள்ளதாகக் கூறி இத்திட்டங்களுக்குத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தடைவிதித்துள்ளது.

ஒரே நெட்வோர்க்கிலுள்ள குறிப்பிட்ட ஒரு பிரிவு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அதிவேக சேவைகளை வழங்குவது என்பது Net Neutrality-க்கு எதிராக உள்ளதாகக் கூறி டிராய் இத்திட்டங்களுக்கு தடைவித்துள்ளது.

இதுகுறித்து 1989ஆம் ஆண்டில் தேசிய தொலைத்தொடர்பு கொள்கை (என்டிபி) வரைவை எழுதிய மூத்தத் தொலைத்தொடர்பு வல்லுநர் டாக்டர் டி.எச். சவுத்ரி கூறுகையில், "கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான காலத்தில், டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தங்களால் முடிந்தவரை கவர முயற்சி செய்கின்றன. இது ஒரு சாதாரண வணிக யுக்தி.

இந்தியாவில் வணிகத்திற்குச் சுதந்திரம் உள்ளது. வாடிக்கையாளர் தங்களுக்குப் பிடித்த நிறுவனத்தைத் தேர்வு செய்யலாம். எனவே யாரும் அவர்களை நிறுத்தக் கூடாது. டிராய் தேவையின்றி சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது அரசுக்கு நல்லதல்ல. நிறுவனங்கள் போட்டியிட்டும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு எது சிறந்ததோ அதைத் தேர்வு செய்யட்டும். அதை சந்தை முடிவுசெய்யட்டும்" என்றார்.

இதையும் படிங்க: 12 வாரங்களில் 13 முதலீடு - அதிரடி காட்டும் ஜியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.