ETV Bharat / business

நாளை முதல் ட்விட்டர், பேஸ்புக் முடக்கமா?

author img

By

Published : May 25, 2021, 12:22 PM IST

Updated : May 25, 2021, 1:36 PM IST

Facebook
சமூக ஊடகங்கள்

மத்திய அரசின் புதிய விதிகளை அமல்படுத்தாத வாட்ஸ்அப், ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் நாளை முதல் செயல்படுமா, இல்லையா என்ற கேள்வி எழும்பியுள்ளது.

சமூக ஊடகங்கள் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகள் நாளை(மே.26) முதல் அமலுக்கு வருகிறது. ஆனால், சில சமூக ஊடக நிறுவனங்கள் புதிய விதிகளை ஏற்க கால அவகாசம் கோரியது.

வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில், நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் கருத்துகள் பகிர்வதாகப் புகார் எழுந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளைக் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், புதிய விதிகளை அமல்படுத்த வாட்ஸ்-அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் ஆறு மாதங்கள் கால அவகாசம் கோரியிருந்தன.

இந்நிலையில், இந்திய நிறுவனமான கூ (Koo) தவிர உயர் சமூக ஊடக நிறுவனங்கள் எதுவும் அரசின் புதிய விதிகளைப் பின்பற்றுவது தொடர்பாக, எவ்விதத் தகவலும் வெளியிடவில்லை. அந்த நிறுவனங்கள் அமெரிக்காவிலுள்ள தலைமை நிறுவனங்களிடமிருந்து அறிவுறுத்தல் வருவதற்காகக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடக நிறுவனங்கள் புதிய விதிகளை ஏற்கவில்லையெனில், அவற்றுக்குத் தடை விதிப்பது மட்டுமின்றி, குற்றவியல் நடவடிக்கையும் எடுப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய விதிகளுக்கு ட்விட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் செவி சாய்க்கத் தவறினால், அவை தடை செய்யப்படும் சூழல் உருவாகலாம். இதனால், நாளை(மே.26) ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் செயல்படுமா என்ற அச்சமும், ஐயமும் இணையவாசிகள் இடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிரப் புயலாகும் 'யாஷ்'

Last Updated :May 25, 2021, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.