ETV Bharat / business

ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு வலுசேர்க்கும் புதிய சட்டம்

author img

By

Published : Aug 6, 2020, 7:57 PM IST

புதிதாக இயற்றப்பட்டுள்ள நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் ஆன்லைன் வாடிக்கையாளர்களின் உரிமையை நிலைநாட்டும் விதமாக அமைந்துள்ளது.

ECOM
ECOM

உலகில் வேகமாக வளரும் ஆன்லைன் சந்தைகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. குறிப்பாக, சில்லரை விற்பனையில் ஆன்லைன் சந்தையானது கடந்த சில ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களைக் கவரும் விதமான, தள்ளுபடிகள், கேஸ்பேக் ஆஃபர்கள் ஆகியவை இந்த ஆன்லைன் சந்தை தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்பட காரணமாக அமைந்தன.

இந்தியாவின் கால்வாசி மக்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருள்கள் வாங்கிவரும் நிலையில், அவர்களின் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க முறையான விதிமுறைகள் வகுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019இல், ஆன்லைன் வர்த்தகம் குறித்து புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி தரும் அம்சமாக அமைந்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தின் பெரும் முதலையாகக் கருதப்படும் அமோசான், இந்தியாவில் மட்டும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வர்த்தகத்தை மேற்கொண்டுவருகிறது. மற்றொரு முக்கிய நிறுவனமான வால்மார்ட் இந்தியா ஃபிளிப்கார்ட்டின் 81 விழுக்காடு பங்குகளை வாங்கியுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 19 ஆயிரம் இ-காமர்ஸ் நிறுவனங்கள் உள்ள நிலையில் அவற்றில் 70 மட்டுமே செயல்படுகின்றன. இந்தியச் சந்தையில் அவை பெரும் பங்கைக் கொண்டுள்ளன. காலணிகள் தொடங்கி உயிர்காக்கும் மருந்துகள் வரை அனைத்தும் தற்போது டிஜிட்டல் தளங்களில் வந்து சேர்ந்துள்ளன.

2018ஆம் ஆண்டு இந்தியாவில் சுமார் 22.5 கோடி இ-காமர்ஸ் வாடிக்கையாளர்கள் இருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் இது 32 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு இந்தியாவின் இ-காமர்ஸ் வர்த்தக மதிப்பு 1.79 லட்சம் ரூபாய் கோடியாக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு இது 6.28 லட்சம் ரூபாய் கோடியாக அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் டிஜிட்டல் விற்பனை அதிகரித்துள்ளதை இங்கு கவனிக்க வேண்டும்.

ஆரம்பக் காலத்தில் இ-காமர்ஸ் விற்பனை தொடர்பாக ஒழுங்கான விதிமுறைகள் இல்லாத காரணத்தால் நிறுவனங்கள் காளாண் போல முளைக்க தொடங்கின. தவறான அல்லது சேதாரமான பொருள்களை அனுப்பினால் அது தொடர்பாக நிறுவனங்களைக் கேள்வி கேட்பது என்பது சாத்தியமற்றதாக இருந்தது. ஐபோன் ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு செங்கல், சோப்பு டப்பா வருவதாகவும் புகார்கள் வந்தன. போலியான, காலாவதியான பொருள்களைத் திருப்பி அனுப்பினால் உரிய நிவாரணம் கிடைப்பதும் கடினமானதாக இருந்தது.

இந்தப் புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிமுறை, இந்தியாவில் வியாபாரம் செய்யும் அனைத்து டிஜிட்டல் ரிடெய்லர்களுக்கும் பொருந்தும். போலி அல்லது தரமற்ற பொருள்களை விநியோகம் செய்தால் அதற்கு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என இந்தப் புதிய விதி கூறுகிறது. அந்தப் பொருளை கேன்சல் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கவும் தடைவிதித்துள்ளது.

ஆன்லைனில் விற்பனையாகும் பொருள்களின் அனைத்து விவரங்களையும் விற்பனை செய்யும் நிறுவனம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என புதிய விதிமுறைகள் தெரிவிக்கின்றன. சில சீனப் பொருள்களின் தடையைக் கருத்தில் கொண்டே இந்த விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மாநிலங்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்.

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நுகர்வோர் உரிமையை நிலைநாட்டும் விதமாக, அதன் ஆணையருக்கு அதிகாரத்தை அதிகரித்துள்ளது. இந்தப் புதிய நெறிமுறைகளுக்கு ஸ்னாப்டீல் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

அதேவேளை அனைத்துப் பொருள்களுக்கும் இதுபோன்ற நிவரணத்தை வழங்குவது நடைமுறையில் கடினமானது என இ-கமார்ஸ் அமைப்பு சார்பில் தெரிவித்துள்ளது. எனினும், இந்தப் புதிய விதி ஆன்லைனில் சில நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்பது நிதர்சனம்.

இதையும் படிங்க: ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; 90% வரை நகைக்கடன்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.