ETV Bharat / briefs

சித்த மருத்துவத்துற்கு ஏன் தனியாக எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை ? - உயர் நீதிமன்றம் கேள்வி!

author img

By

Published : Jul 7, 2020, 11:54 PM IST

சித்த மருத்துவத்துற்கு ஏன் தனியாக எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை ? - நீதிமன்றம் கேள்வி!
சித்த மருத்துவத்துற்கு ஏன் தனியாக எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை ? - நீதிமன்றம் கேள்வி!

மதுரை : மத்திய அரசு 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் சித்த மருத்துவத்திற்கு என ஏன் தனியாக எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என மதுரை கிளை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன் தான் கண்டறிந்த, 66 வகையான மூலிகைகளைக் கொண்ட இம்ப்ரோ எனும் சித்த மருந்தை வைராலஜி துறை நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளைக் அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "மருத்துவ நிபுணர் குழு பரிசோதித்ததில் இம்ப்ரோ மருந்துப் பொடியில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் எதிர்ப்பு சக்தியும் இருக்கலாம் என கருதுவதால் மத்திய ஆயுர்வேதம் மற்றும் சித்தா ஆராய்ச்சி குழுமத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று உத்தரவை வழங்கினார்.

அதன் விரிவான உத்தரவில்," மத்திய, மாநில அரசுகள் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களுக்கு பெருமளவு நிதியை ஒதுக்கினாலும் துரதிருஷ்டவசமாக 90 சதவீத நிதியை நவீன மருத்துவ துறையே பயன்படுகிறது.

மத்திய அரசின் 2020-2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஆயுஷ் அமைச்சகத்திற்கு ரூ.2000 கோடியை ஒதுக்கியது. ஆனால் சித்த மருத்துவத்திற்கு ஏன் தனியாக எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை. பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம் தற்போது மறைந்து வருகிறது.

தற்போதைய தலைமுறையினர் துரித உணவுகளில் அதீத ஆர்வம் காட்டுவதால் பாட்டி வைத்தியம் உள்ளிட்ட நமது பாரம்பரிய வைத்தியங்கள் மறக்கப்பட்டு வருகின்றன.

சித்த மருத்துவம் பழங்காலம் தொட்டே பயன்பாட்டில் உள்ளது. யோகாவை போலவே சித்த மருத்துவமும், நமது தமிழ்நாடு இந்தியாவிற்கும், இந்த உலகத்திற்கும் கொடுத்த ஒரு பரிசு.

தற்போது, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து 100 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சியில் உள்ளது.

அரசு மற்றும் சாதாரண குடிமக்கள் வரை பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளோம்.

இப்போது"எதை தின்றால் பித்தம் தெளியும்" என்ற சூழ்நிலையில் தான் உள்ளோம். எனவே, சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பொக்கிஷமாக பயன்படுத்தி, குறைந்த அளவில் முதலீட்டில் சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி, சாதாரண மக்களுக்கு மருந்துகள் சென்றடைய வேண்டும்.

மேலும், கரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவில் 2.9%, தமிழ்நாடு 1.3% கேரளா 0.5%. காரணம் கேரளாவில் ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலின் போது சித்த மருந்தான நிலவேம்பு குடிநீர் கொடுக்கப்பட்டது. இதில் அதிகப்படியான மக்கள் டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்தனர். எனவே பழமைவாய்ந்த சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆகவே, சித்த மருத்துவத்தின் அடிப்படையில் சித்த மருந்துகளையும் முறையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி முடிவுகளின் அடிப்படையில் பயன்பாட்டிற்குக் கொணரவேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தவரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்திருக்கும் 'இம்ப்ரோ' மருத்துவப் பொடியை, ஆய்வு செய்து மத்திய சுகாதாரத்துறை செயலர் மற்றும் மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி குழுமத்தினர் ஆகஸ்ட் 3ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.