ETV Bharat / briefs

வரதட்சணை கொடுமை: திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 5, 2020, 8:17 PM IST

நாகப்பட்டினம்: வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பெரம்பூர் காவல் துறையினர், திருமணமாகி 4 மாதங்கள் மட்டுமே ஆவதால் விசாரணை செய்ய மயிலாடுதுறை கோட்டாட்சியருக்கு பரிந்துரைத்துள்ளனர்.

young-women-sucide
young-women-sucide

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள வேலம்புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார்(31). எம்சிஏ பட்டதாரியான இவர், கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கும்பகோணம் அம்மன்குடியைச் சேர்ந்தவர் வர்ஷா(21). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி சங்கரன்பந்தலில் திருமணம் நடைபெற்றது. அப்போது, 25 சவரன் நகை, இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை வர்ஷா வீட்டினர் சீதனமாக அளித்ததாகக் கூறப்படுகிறது. இருந்தபோதும் சோஃபா, அம்பாசிடர் கார், மேலும் நகை உள்ளிட்டவை வேண்டும் என்று கணவர் வீட்டினர் தொந்தரவு செய்து வந்தனர்.

இதனிடையே, மே மாதம் 24ஆம் தேதி தாய்வீட்டில் தாலி பிரித்துக் கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மூன்று தங்க நகை வேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனால், கரோனா ஊரடங்கு முடிந்ததும் செய்வதாக வர்ஷா வீட்டினர் கூறினர். பின்னர், வர்ஷா 2 மாத கர்ப்பிணியாக இருப்பது இரு நாட்களுக்கு முன்பு உறுதியானது. இதையடுத்து, வர்ஷாவை அவரது சகோதரர் நேற்று (ஜூன் 4) கணவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அதன்பின், வர்ஷா விஷம் அருந்தியதாகவும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது, வர்ஷா இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

அப்போது, அவரது உடலில் காயம் இருப்பதைக் கண்ட உறவினர்கள், வர்ஷா தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழை இல்லை என்றும் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய வர்ஷாவின் கணவர், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், திருமணமாகி 4 மாதங்கள் ஆவதால் மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணியை விசாரணை செய்ய பரிந்துரைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.