ETV Bharat / briefs

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர்!

author img

By

Published : Aug 5, 2020, 5:05 PM IST

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்றவர்களை வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் !
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்றவர்களை வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் !

சென்னை : இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2019ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான மதுரை மாவட்டம், மணிநகரம் பகுதியைச் சேர்ந்த பூரண சுந்தரி மற்றும் சென்னையைச் சேர்ந்த பாலநாகேந்திரன் ஆகிய இருவரும் இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வென்று சாதனை புரிந்துள்ளார்கள் என்பதை அறிந்து, நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

'தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்;

மெய்வருத்தக் கூலி தரும்' என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப செல்வி பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் ஆகிய இருவரின் மன உறுதியும், விடா முயற்சியும் தான் அவர்களுடைய வெற்றிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற அடிப்படையில் கடமைகளை உணர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன், அரசு நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில் பணிகளை ஆற்றிட வேண்டுமென அன்புடன் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல... என்பதற்கு சான்றாகத் திகழும் பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் ஆகியோரது வெற்றி, சாதனை படைக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்" என அதில் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.