ETV Bharat / briefs

சிஆர்பிஃஎப் வீரரின் கரோனா பரிசோதனையின் மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்!

author img

By

Published : Jun 12, 2020, 6:24 PM IST

தூத்துக்குடி: கரோனா பரிசோதனையின் மாறுபட்ட முடிவுகளால் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் சிஆர்பிஃஎப் வீரர், அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

CRPF Police Different Corona Test Report
CRPF Police Different Corona Test Report

தூத்துக்குடி மாவட்டத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, 379 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். 252 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ள 125 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மட்டக்கடை அருகேயுள்ள சின்னகடை தெருவைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் உள்பட 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனிடையே, திருச்சியில் பணிபுரிந்து வந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காய்ச்சல் காரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் தன்னை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்த நிலையில், அதன் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே அவர் அங்கிருந்து இருசக்கர வாகனம் மூலம் தூத்துக்குடி மட்டக்கடையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். பின்னர், சளி பிரச்னைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

இதற்கிடையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அவர் எடுத்த பரிசோதனை முடிவில் சிஆர்பிஃஎப் வீரருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை என கண்டறியப்பட்டிருந்தது.

இரண்டு பரிசோதனைகளில் மாறுபட்ட முடிவால் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக சிஆர்பிஃஎப் வீரர், அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் முடிவு செய்தனர். அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.