ETV Bharat / briefs

காவலர்களுக்கு உதவிட கரோனா கட்டுப்பாட்டு அறை தொடக்கம்!

author img

By

Published : Jun 20, 2020, 2:52 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கரோனா நோயால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

Corona Control Room
Corona Control Room

தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்புப் பணியில் காவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் கரோனா தொற்றினால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் இதுவரை 780க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவலர்களின் குடும்பத்தினர் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் டிஜிபி அலுவலகத்தில் கோவிட்-19 கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையருக்கு காவல் துறைத் தலைவர் திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "காவலர்கள், அவரது குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களின் முழு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். இதனை www.ppts.tncovid19.org என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்து, அவர்களுக்குப் போதுமான ஏற்பாடுகள் வழங்க உதவிபுரியும் வகையில் இந்தக் கட்டுப்பாட்டு அறை செயல்படும்

ஏற்கெனவே மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட பணப் பற்றாக்குறையினால் காவல் ஆணையர் உதவிபுரிந்தார். இதுபோன்ற சூழ்நிலையின்போது இந்த கட்டுப்பாட்டு அறை உதவும்.

மேலும் தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் கரோனாவினால் பாதிக்கப்படுவதை வலைதளத்தில் பதிவுசெய்வதன் மூலம் குறிப்பிட்ட காவல் நிலையத்தில் காவலர்களின் பற்றாக்குறை உள்ளதா என்பதையும் எளிதாகக் கண்டறிய முடியும். ஏற்கெனவே ஓய்வு அளித்துள்ள 25 விழுக்காடு காவலர்களைப் பணிக்கு அழைக்க எளிதாக இருக்கும்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கவும், இரண்டு லட்சம் ரூபாய் தொகையை வழங்கவும் இந்த வலைதளம் பயன்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முகக்கவசத்தை கையாள்வது எப்படி? - பொதுமக்களிடம் விளக்கும் ஏடிஜிபி ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.