ETV Bharat / briefs

குழப்பத்துடன் வெளியான 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

author img

By

Published : Jul 17, 2020, 7:31 AM IST

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை 16) வெளியானது. முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்கு எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல் குழப்பத்துடன் அவசரகதியில் வெளியிடப்பட்டன.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை 16) வெளியாயின. வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியிடும் நாளுக்கு முன்பாக எந்த இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம் என்பது குறித்தும், மாணவர்கள் தேர்விற்கு பின்னர் சிறப்பு துணைத் தேர்வு விண்ணப்பம் செய்தல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுதல், தேர்வு முடிவுகள் வெளியாகும் வழிமுறைகள் குறித்தும் அரசு தேர்வுத் துறையால் அறிவிக்கப்படும்.

ஆனால் இந்தாண்டு அரசு தேர்வுத் துறையின் மேல்நிலைக் கல்வி இணை இயக்குநருக்கு கூட தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்ற தகவல் கூறப்படவில்லை. தேர்வுத் துறையில் இருந்து வரவேண்டிய அறிவிப்பு, நேற்று காலை திடீரென செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இருந்து வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பிலும் மாணவர்கள் எந்த இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வி அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர்களுக்கு கூட தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உரிய தேர்வு முடிவுகள் அறிவிப்பு பலகையில் ஒட்டுவதற்கு மதிப்பெண் அடங்கிய பட்டியல் முன்கூட்டியே தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தாண்டு அதுவும் அனுப்பி வைக்கப்படவில்லை. இதன்காரணமாக தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படித்த மாணவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் என்ற விவரத்தை கூட தெரிந்து கொள்ள முடியாமல் அவதி அடைந்தனர்.

மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்கள் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் இருந்து குறிப்பிடும் நாளில் பதிவிறக்கம் செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை என்று தர வேண்டுமெனவும் எந்தவித தகவலையும் அறிவிக்கவில்லை.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை கொண்டு கல்லூரி சேர்க்கைக்கும் மற்றும் அவசர தேவைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும், பின்னர் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பிரிண்ட் செய்யப்பட்டு பள்ளிக்கு அளிக்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மதிப்பெண் சான்றிதழில் பிழை:

பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் பட்டியல்களை சரிபார்த்து அவற்றில் தலைப்பு எழுத்து, பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருந்தால் தலைமையாசிரியர் திருத்தத்தை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு அளித்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கூறும்போது, “வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி முன்கூட்டியே தங்களுக்கு தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்வோம்.

அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை அறிவிப்பு பலகையில் ஓட்டி வைப்போம். மாணவர்கள் பார்த்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற விவரமும், தோல்வி அடைந்த மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர் என்பது குறித்தும் தங்களால் அறிந்து கொள்ள முடியும். இந்தாண்டு அரசு தேர்வுத்துறை அனைத்தையும் காலையில் செய்ததால் எந்தவித பணியையும் மேற்கொள்ள முடியவில்லை” என தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.