ETV Bharat / bharat

"அலோபதியை குழிதோண்டி புதைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது" - பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு!

author img

By

Published : Mar 20, 2023, 7:11 PM IST

Yoga
Yoga

அலோபதி மருந்துகள் நோயைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக மக்களை நோயாளியாக்குகிறது என்றும், அலோபதியை குழிதோண்டி புதைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றும் சர்ச்சை சாமியார் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

ஹரித்வார்: யோகா குரு என்று அழைக்கப்படும் இந்து சாமியார் பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை தொடர்ந்து விமர்சித்து வருபவர். இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள ரிஷிகுல் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் நடந்த ஆயுர்வேத கருத்தரங்கில் பங்கேற்று பேசிய பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவத்தை மீண்டும் தாக்கிப் பேசியுள்ளார்.

ஆயுர்வேத மருத்துவ மாணவர்கள் மத்தியில் பேசிய பாபா ராம்தேவ், "அலோபதி மருந்துகள் நோயைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக மக்களை நோயாளியாக்குகிறது. ஆயுர்வேதத்திற்கு போட்டியாக பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டன. தற்போது அலோபதியை குழிதோண்டி புதைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் தலைசிறந்த யோகா பயிற்சிகளை கையாளத் தொடங்கி விட்டன. இனி வரும் காலங்களில், அலோபதி மருத்துவம் பாழும் குழியில் புதைந்துவிடும், அது நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது.

அலோபதி மருந்துகள் ஒருபோதும் எந்த நோயையும் குணப்படுத்தாது, ஒரு நோய்க்காக நீண்ட காலத்திற்கு மருந்து உட்கொண்டாலும் அந்த நோய் குணமாகாது. உலகில் சுமார் 25 சதவீதம் பேருக்கு, அலோபதி மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளும் காரணத்தால் கல்லீரல் பிரச்னை ஏற்படுகிறது. அதேபோல், அலோபதி மருந்துகளால் பலருக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன.

கரோனாவை குணப்படுத்துவதில் கோவிட் தடுப்பூசிகள் தோல்வியடைந்தன. கரோனா சிகிச்சைக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அலோபதி மருத்துவம் தோற்றுவிட்டது, மாறாக ஆயுர்வேத மருத்துவம் வெற்றி பெற்றது. மருத்துவ மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும், பின்பு தானாக வெற்றி கிடைக்கும்.

அலோபதி மருத்துவம் தொடர்பான எனது கருத்துகளை எம்.பி.பி.எஸ் மாணவர்கள் தவறாக கருத வேண்டாம். எனது பார்வையை சரியாகப் புரிந்து கொண்டால், நீங்களும் எனது கருத்துகளை ஏற்றுக்கொள்வீர்கள். தற்போதைய மாறிவரும் காலகட்டத்தில் ஏராளமான மக்கள் ஆயுர்வேத மருத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அலோபதி மருத்துவம் அதன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது" என்று கூறினார்.

பாபா ராம்தேவ் இதுபோன்ற பேச்சுகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. கரோனா காலத்தில் அலோபதி மருந்துகளை கடுமையாக விமர்சித்த அவர், கரோனாவுக்கு தான் ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது பதஞ்சலி நிறுவனம் கொண்டு வந்த கரோனா மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்தது.

அதேபோல், மத ரீதியாகவும், பாலின ரீதியாகவும் பல்வேறு சர்ச்சைக் கருத்துகளை கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்களின் ஆடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறினார். பெண்கள் எதுவும் அணியாமல் இருந்தாலும் அழகாக இருப்பதாக கூறினார். இதற்கு மகளிர் ஆணையம் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது பேச்சுக்காக மன்னிப்புக் கோரினார்.

இதையும் படிங்க: இந்து பெண்களை அவமதித்தால் கைகளை வெட்டுவோம் - மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.