ETV Bharat / bharat

ஒடிசா ரயில் விபத்து - உலகத் தலைவர்கள் இரங்கல்

author img

By

Published : Jun 3, 2023, 11:54 AM IST

Etv Bharat
Etv Bharat

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான நிகழ்விற்கு உலக தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஒடிசா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 900க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடர்பாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்து துரதிஷ்டவசமானது எனவும், அந்த செய்தியை அறிந்து மிகவும் துயருற்றேன் எனவும் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள திரௌபதி முர்மு, மீட்புப் பணிகள் வெற்றியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாகவும் இந்த துக்ககரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நினைத்து வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் கேட்டறிந்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், பாலசோர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து வேதனை அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவிப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களையும், தலைவர்களையும் கேட்டுக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேபாள பிரதமர் பிரச்சண்டா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து உள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசபை தலைவர் சிசாபா கொரோசி, ஒடிசா ரயில் விபத்து குறித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், விபத்து குறித்தும் பயணிகள் இறப்பு குறித்தும் அறிந்து மிகுந்த வேதனையுற்றதாக கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தனது இரங்கலை தெரிவிப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

  • I'm saddened by the loss of dozens of lives in a train accident in Odisha, India today. I extend deep condolences to Prime Minister Shri @narendramodi Ji, Government, and the bereaved families at this hour of grief.

    — ☭ Comrade Prachanda (@cmprachanda) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

விபத்து குறித்து செய்தி வெளியிட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஷாலிமார் - கோரோமண்டல் விரைவு ரயில் பாலசோர் அருகே விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார். மேலும், இந்த விபத்தில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளார். மேற்கு வங்க அரசு ஒதிசா அரசுடன் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் (எஸ்சிஏ) இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் கிழக்குப் பகுதியில் துரதிஷ்டவசமான ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், அதில் பலர் உயிரிழந்துள்ள நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த துயருற்ற அனுபவத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் மற்றும் சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் வோங்கும் ஒடிசா ரயில் விபத்து குறித்து ட்வீட் செய்துள்ளனர். அதில் ஒடிசா ரயில் விபத்து செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்களது இரங்கலை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், டெல்லியில் உள்ள இத்தாலி தூதரகமும் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த இந்திய குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தைவான் அதிபர் சாய் இங்-வென் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில் இந்தியாவில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

  • Praying for everyone affected by the train accident in India. I extend my heartfelt condolences to the victims and their families, and hope that rescue operations can save all those in need.

    — 蔡英文 Tsai Ing-wen (@iingwen) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒடிசா விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அதில் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆறுதலை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அதேநேரம், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, ஒடிசா ரயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த துயர் உற்ற நேரத்தில் இலங்கை, இந்திய அரசுக்கு துணையாக நிற்கும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Coromandel Express accident: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்க அனுசரிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.