எந்த மாதிரியான தேர்தல்கள் இவை..?

author img

By

Published : Nov 7, 2022, 8:11 PM IST

Updated : Nov 7, 2022, 10:42 PM IST

எந்த மாதிரியான தேர்தல்கள் இவை?
எந்த மாதிரியான தேர்தல்கள் இவை? ()

நாட்டில் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்படக் கூடிய தேர்தல் முறை கொண்டுவரப்பட வேண்டும். தேர்தல் மூலம் கிடைக்கும் பதவி முறையும் சீர்திருத்தப்பட வேண்டும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் கட்சி மாறிய உடனே பதவியை பறிக்க வேண்டும். அதேபோல கட்சி மாறிய பிறகு 5 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் கட்சித் தாவல்களை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

ஹைதராபாத்: தெலங்கானா முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த முனுகோடு இடைத்தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்த தேர்தலின் போது நடத்தப்பட்ட கேலிக்கூத்துக்கள் மக்களுக்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது. தேர்தல் என்பது பணபலம் மற்றும் ஆள்பலத்தின் கைப்பாவையாக இருப்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது. ஒரு ஓட்டுக்கு 1 ரூபாய் வழங்கப்பட்ட காலம் முதல், ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் காலம் வரை அரசியல் தலைவர்கள் தொடர்ந்து மக்களுக்கு துரோகத்தையே செய்துவருகின்றனர். இந்த துரோகத்தையும் தேர்தல் விதி மீறல்களையும் தேர்தல் ஆணையம் சாதாரண பார்வையாளனாக வாய்மூடிவேடிக்கை பார்த்துவருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச தேர்தல் செலவு தொகையானது, ஒரு நாளைக்கே போதாதது என்று ஒரு எம்பி பகிரங்கமாக பேசியிருப்பதும் நடந்துள்ளது.

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் ரூ.35,000 கோடி பணத்தை செலவிட்டதாகவும், இந்த தொகை 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது ரூ.60,000 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் பல தேர்தல் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் கருப்புப் பணமாகத்தான் இருக்க வேண்டும். அதேபோல சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் தடையின்றி கருப்புப் பணம் புழங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நீதிபதி சாக்லா, தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் மட்டுமல்ல, வாக்காளர்களின் நேர்மையும் நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், அரசியல் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? வாக்காளர்களை பணபோதை மயக்கத்திலேயே இன்றளவும் வைத்துள்ளன.

கேட்டால் வாக்காளர்களே ஓட்டுக்கு பணம் கேட்கிறார்கள் என்று சில கட்சிகள் சொல்லிக்கொள்வதுண்டு. இது அரசியல் கட்சியின் ஒரு வகை பொய் பிரச்சாரமே. தேர்தல்களில் கோடி, கோடியாய் பணத்தை செலவழித்து, அந்த பணத்தை மீட்பதற்காக கட்டுப்பாடற்ற ஊழல்கள் நடக்கின்றன. அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோலாக நேர்மையும், மக்கள் பணி அர்ப்பணிப்பும் இருந்த காலம் மலையேறி போய்விட்டது. இப்போது பண பலமும், குற்றப் பின்னணியும் தலை தூக்கி விட்டது. சில அரசியல் கட்சிகள் சாதி, மத அடிப்படையில் பிரித்தாளும் அரசியலில் ஈடுபட்டுவருகின்றன. தேர்தலின்போது நடக்கும் விதிமீறல்கள் அரசியலமைப்பையே கேள்விக்குறியாக்கிவிட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் நற்பெயரை நிலைநிறுத்த வேண்டுமானால், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவால் தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதுபோலவே, சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்படக் கூடிய தேர்தல் முறை கொண்டுவரப்பட வேண்டும். தேர்தல் நடைமுறையை சீர்திருத்தம் செய்வது குறித்து பல்வேறு வல்லுநர் குழுக்களால் செய்யப்பட்ட பரிந்துரைகள் அப்படியே கிடப்பில் போட்டப்பட்டுள்ளன. அந்த பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதுடன், தேர்தல் மூலம் கிடைக்கும் பதவி முறையும் சீர்திருத்த வேண்டும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி மாறிய உடனே பதவியை பறிக்க வேண்டும். அதேபோல கட்சி மாறிய பிறகு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு அவர்கள் அடுத்துவரும் தேர்தல் போட்டியிட தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் கட்சித் தாவல்களை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த நலனுக்காக நாட்டின் நலனைப் பணயம் வைக்க விரும்பாத வேட்பாளர்களுக்கு முன்னுரிமையும், வாய்ப்பையும் கொடுப்பது முக்கியமானது மட்டுமல்ல இன்றைய சூழலில் அவசியமானது. அரசியல் கட்சிகள், சமூகத்தின் வளர்ச்சிக்காக தாங்கள் மேற்கொள்ள விரும்பும் நடவடிக்கைகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். அதையும் ஆட்சிக்கு வந்த உடன் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும். ஆனால், இன்றைய அரசியல் கட்சிகள் மக்களின் ஆசையை தூண்டும் வகையில் வாக்குறுதிகளை அளிக்கின்றன. அதையும்கூட ஆட்சிக்கு வந்த பிறகு மறந்துவிடுகின்றன. இதுபோன்ற நடத்தைகள் வேரறுக்கப்பட்டு, தேர்தல்களில் ஆழமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போதுதான் நாட்டில் ஜனநாயகம் வெல்லும். ஈநாடு தலையங்கம்

இதையும் படிங்க: முனுகோடு இடைத்தேர்தல் - டிஆர்எஸ் வேட்பாளர் குஷுகுந்தல பிரபாகர் ரெட்டி வெற்றி

Last Updated :Nov 7, 2022, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.