ETV Bharat / bharat

புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலத்தில் திடீர் சோதனை; கையும் களவுமாக பிடிபட்ட இரு அதிகாரிகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 3:46 PM IST

புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலத்தில் திடீர் சோதனை
புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலத்தில் திடீர் சோதனை

Puducherry CBI raid: புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று (ஜன.5) அதிரடி சோதனை மேற்கொண்ட நிலையில், இரு அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி: புதுச்சேரி 100 அடி சாலையில் இந்திரா காந்தி சதுக்கம் அருகில் வணிகவரி வளாகம் இயங்கி வருகிறது. புதுச்சேரி வணிகவரித்துறை அதிகாரிகள் மீது ஊழல் புகார்கள் அடுக்கப்பட்டதையடுத்து, நேற்று (ஜன.5) புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகத்தில், சிபிஐ அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் இருந்து 3 கார்களில் சென்ற சிபிஐ அதிகாரிகள், ஒட்டுமொத்த அலுவலகத்தையும் சோதனையிட்டனர்.

இந்த சோதனையின்போது பெண் அதிகாரி ஒருவரை, சிபிஐ அதிகாரிகள் சென்னை சாஸ்திரி பவனுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரி வசூலிப்பில் முறைகேடு செய்ததாக வணிக வரித்துறை அதிகாரிகள் ஆனந்தன், முருகானந்தம் ஆகியோர் மீது ஆதாரங்களுடன் புகார் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கடந்த இரண்டு மாதங்களாக இரண்டு அதிகாரிகளையும் சிபிஐ அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அந்த அதிகாரிகள் ஆதாரங்களுடன் அலுவலகத்தில் கையும் களவுமாக இன்று (ஜன.6) பிடிபட்டனர். இதனையடுத்து, சிபிஐ அதிகாரிகள் அவ்விரு அதிகாரிகளிடத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இருவரையும் சிபிஐ அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதனால், வணிகவரி வளாகத்தில் நேற்று (ஜன.5) மாலை முதல் இன்று (ஜன.6) காலை வரை அலுவலகம் உள்பக்கமாக பூட்டு போடப்பட்டு, சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அலுவலர்கள், பொதுமக்கள் என யாரும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படாததால், வணிகவரி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க: பசுபதி பாண்டியன் நினைவு தினம்; தூத்துக்குடியில் 75 டாஸ்மாக் மூடல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.