ஸ்பைஸ் ஜெட் விமானம் குலுங்கிய சம்பவம் - குழு அமைத்து தீவிர விசாரணை...!

author img

By

Published : May 2, 2022, 9:49 PM IST

SpiceJet

ஸ்பைஸ் ஜெட் விமானம் குலுங்கிய சம்பவத்தில் காயமடைந்த 40 பயணிகளில், இருவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டெல்லி: நேற்று(1/5/2022) மும்பையிலிருந்து மேற்குவங்க மாநிலம், துர்காபூர் விமான நிலையத்திற்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் திடீரென குலுங்கியது. அப்போது சுமார் 2 நிமிடம் ஆட்டோபைலட் வசதியும் வேலை செய்யாததால், விமானிகள் சிரமப்பட்டு விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், துர்காபூர் விமான நிலையத்தில் விமானம் தறையிறக்கப்பட்டது.

விமானம் குலுங்கியதில், விமானத்தில் இருந்த பயணிகளின் உடமைகள் உள்ளிட்டவை பயணிகள் மீது விழுந்துள்ளது. மொத்த விமானமும் குலுங்கியதால், 40-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அதில், 14 பயணிகள் மற்றும் மூன்று விமான ஊழியர்கள் படுகாயமடைந்தனர். பின்னர் காயமடைந்த பயணிகள் துர்காபூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2 பயணிகள் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "விமானம் குலுங்கிய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதுதொடர்பாக விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பிறகு முழு விவரங்கள் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்துத்துறை அமைத்துள்ள விசாரணைக் குழு துர்காபூர் விமான நிலையத்தில் நேரில் ஆய்வு செய்துள்ளது. மேலும், விசாரணை முடியும்வரை சம்பந்தப்பட்ட விமானப் பணியாளர்கள், விமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: Raj Thackeray cancels 'Maha Aarti': ராஜ் தாக்கரே கைதாக வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.