ETV Bharat / bharat

cheetah : குனோ தேசிய பூங்காவில் 2 சிவிங்கிப்புலி குட்டிகள் உயிரிழப்பு.. பூங்கா நிர்வாகம் விளக்கம்!

author img

By

Published : May 25, 2023, 6:57 PM IST

Cheetah
Cheetah

மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் மேலும் இரண்டு சிவிங்கிப் புலிக் குட்டிகள் உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்து உள்ளது.

ஷியோபூர் : குனோ தேசிய பூங்காவில் கடந்த மார்ச் மாதம் பிறந்த இரண்டு சிவிங்கி புலிக் குட்டிகள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப் புலிகள் இனத்தைக் கொண்டு வரும் விதமாக கடந்த ஆண்டு நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 5 பெண், 3 ஆண் சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. மேலும் கடந்த பிப்ரவரி மாதம், 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் மேலும் 12 சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி தனது 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகளை மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்துவிட்டார். இந்த சிவிங்கி புலிகளை வனத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சாஷா என்ற பெண் சிவிங்கி புலி, கடந்த மார்ச் மாதம் சிறுநீரகக் கோளாறு காரணமாக உயிரிழந்தது. அதேபோல், தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட உதய் என்ற சிவிங்கிப் புலி கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தது. சிவிங்கிப்புலி ஷாஷா இறந்த ஒரு மாதத்திற்குள் மற்றொரு சிவிங்கிப் புலியான உதய் உயிரிழந்தது.

இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட தக்‌ஷா என்ற சிவிங்கிப் புலி உயிரிழந்தது. இனப்பெருக்கத்திற்காக ஆண் சிவிங்கிப் புலிகள் இருந்த இடத்தில் பெண் சிவிங்கிப்புலி தக்‌ஷாவை திறந்து விடப்பட்டு இருந்த நிலையில், ஆண் சிவிங்கி புலி தக்‌ஷாவை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

வனத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சிகிச்சை அளித்து வந்த போதிலும் தக்‌ஷா சிவிங்கிப் புலி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிப் புலி குட்டி ஒன்று உயிரிழந்துவிட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஜுவாலா என்ற பெண் சிவிங்கிப் புலி, கடந்த மார்ச் 29ஆம் தேதி நான்கு குட்டிகளை ஈன்ற நிலையில் அதில் ஒரு குட்டி உயிரிழந்ததாக தெரிவித்தனர். தற்போது மீதமுள்ள 3 சிவிங்கிப் புலிக் குட்டிகளில் 2 குட்டிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் அடுத்தடுத்து மூன்று குட்டிகள் உயிரிழந்தது பூங்கா நிர்வாகத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொளுத்தம் வெயிலின் உஷ்ணம் காரணமாகவே இந்த மூன்று சிவிங்கிப் புலிக் குட்டிகளும் உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் மற்றும் வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் குனோ தேசிய பூங்காவில் உயிரிழந்த சிவிங்கிப் புலிக் குட்டிகளின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்து உள்ளது. மேலும், உயிரோடு உள்ள ஒரேயொரு சிவிங்கிப் புலிக் குட்டியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் அதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பூங்கா நிர்வாகம் மற்றும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : குனோ பூங்காவில் மூன்று மாதத்தில் 4வது சிவிங்கிப்புலி குட்டி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.