ETV Bharat / bharat

Tirupati Temple: சிறுத்தைகளை விரட்ட குச்சிகளை கொடுக்கும் திருப்பதி தேவஸ்தானம்..

author img

By

Published : Aug 18, 2023, 7:26 PM IST

Updated : Aug 19, 2023, 7:22 PM IST

Tirupati Leopard Attack: திருப்பதி கோயிலில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளாக பக்தர்களுக்கு மூங்கில்மர கம்புகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கத் தொடங்கியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சிறுத்தைகளை விரட்ட குச்சிகள் மட்டும் போதாது..! - திருப்பதி செல்லும் பக்தர்கள் அதிருப்தி

திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்): சிறுத்தை போன்ற வனவிலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளப் பக்தர்களின் பாதுகாப்பிற்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, திருப்பதி கோயில் வரையிலான மலையேற்றப் பாதையின் தொடக்க இடமான அலிபிரி மலையின் அடிவாரத்தில் பக்தர்களுக்கு மூங்கில்மர கம்புகளை வழங்கத் தொடங்கியுள்ளனர் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள். ஆனால், இது வனவிலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள முழுமையான தீர்வல்ல என்று பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நாகேஷ் மாத்ரே என்ற பக்தர் ஒருவர் கூறுகையில், "மரக் கம்புகளைக் கண்டு சிறிய விலங்குகள் பயப்படும் ஆனால் பெரிய விலங்குகள் பயப்படாது. எனவே, பெரிய விலங்குகளிடம் இருந்து பக்தர்களைக் காக்க வனத்துறை துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பாதுகாப்பான வழிமுறைகள் என்ன என்பது உள்ளூர் மக்களுக்குத் தெரியும், ஆனால் வெளியில் இருந்து வருபவர்களுக்கு அது தெரியாது" என தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து மேந்திரா என்ற பக்தர் ஒருவர் கூறுகையில், "ஒரு மரக் கம்பு முழு பாதுகாப்பை உறுதி செய்யாது. ஆனால், ஒரு குழுவில் நாங்கள் கம்புகளை எடுத்துச் செல்லும்போது விலங்குகள் பயந்து சென்றுவிடும்" என்று நம்பிக்கைத் தெரிவித்தார். திருமலை திருப்பதியில் சமீபத்தில் சிறுத்தைகள் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, திருப்பதி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 14) அன்று உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.

அந்த கூட்டத்தில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நடை பாதைகளின் வழியாக மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.கருணாகர ரெட்டி கூறுகையில், "வன விலங்குகளின் தாக்குதலைத் தடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற வன ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் குழுக்களாக மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள், இந்தக் குழுக்களுடன் ஒரு பாதுகாவலரும் இருப்பார்" என தெரிவித்தார்.

இதுமட்டும் அல்லாது, விலங்குகளுக்கு உணவுப் பொருட்களை வழங்குவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது, அத்தகைய உணவுப் பொருட்களை விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பாதையில் உள்ள ஓட்டல்களில் உணவுக் கழிவுகளை வீசவோ, கொட்டவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 500 சிசிடிவி கேமராக்கள் மற்றும் உயர்திறன் கொண்ட விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. விலங்கு கண்காணிப்பாளர்கள் மற்றும் மருத்துவர்களுடன் 24 மணிநேரமும் செயல்படும் வனவிலங்கு புறக்காவல் நிலையங்களும் உருவாக்கப்படும் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஓடும் ரயிலின் கழிவறையில் சிறுமியின் கால் சிக்கியதால் பரபரப்பு!

Last Updated : Aug 19, 2023, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.