ETV Bharat / bharat

Exclusive... அடுத்தது நான் தான்... சல்மான் ருஷ்டி சம்பவத்திற்குப் பின் தஸ்லிமா நஸ்ரினின் பேட்டி

author img

By

Published : Aug 17, 2022, 7:31 PM IST

Updated : Aug 17, 2022, 7:46 PM IST

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்குப் பின் மீண்டும் தனக்கு ட்விட்டரில் கொலை மிரட்டல்கள் வருகின்றன என்று ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ளார்.

தஸ்லிமா நஸ்ரின்
தஸ்லிமா நஸ்ரின்

டெல்லி: சமீபத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொடூரத் தாக்குதல் நடைபெற்றது. இதனால், உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள், ஜனநாயகவாதிகள், மதச்சார்பற்றவர்கள் எனப் பல தரப்பினரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதைத்தொடர்ந்து, சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து, நாடு கடத்தப்பட்ட வங்தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினிடம் ஈடிவி பாரத் ஊடகம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பிரத்யேகப்பேட்டி கண்டது. அந்த பேட்டியின் சுருக்கத்தை இங்கு காணலாம்.

கேள்வி: சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலை எப்படி பார்க்கிறீர்கள்... சமூக ரீதியாக நாம் பின்னோக்கி செல்வதாக நினைக்கிறீர்களா?

பதில்: இதுபோன்ற செயல்கள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அனைவரும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும். பிறரைக் கொல்வது என்பது எப்போதும் சரியாகாது.

கேள்வி: இதைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? 'சர் டான் சே ஜூடா' (தலையை வெட்டுங்கள்) போன்ற முழக்கங்கள் இந்தியாவிலும் அதிகம் கேட்க முடிகிறதே?

பதில்: அதேதான், இது உலக முழுவதும் நடக்கிறது. அமெரிக்கா போன்ற அதிக நாட்டில் சல்மான் ருஷ்டிக்கு உச்சபட்ச பாதுகாப்பு இருந்தது. அங்கேயே இப்படி நடக்கும் என்றால், இதுபோன்று எங்கு வேண்டுமானாலும் நடக்கும். இஸ்லாமிய சமூகத்தில் அடிப்படைவாதம் வளர்வதைத் தடுத்தால் மட்டுமே இதுபோன்ற தாக்குதல் இல்லாமல்போகும்.

அடிப்படைவாதம் தடுக்கப்பட்டால், பயங்கரவாதமும் குறையும். இது அவ்வளவு எளிதல்ல, நாம் அதற்கு அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. ஏனென்றால், அடிப்படைவாதம் 25-26 வயதினரைத் தான் அதிகமாக செல்லரித்துள்ளது. அவர்களை எளிதாக மூளைச்சலவை செய்ய முடிவதால், மத குருக்களுக்கு அவ்வேலை எளிதாகிறது. இது தடுக்கப்பட்டால் போதும், அதிகம் பலன் கிடைக்கும். மேலும், இணையத்தில் அதிகமான 'அபாயகரமான (அடிப்படைவாத) கருத்துகள்' உலா வருகின்றன. இதனால், இளைஞர்கள் யார் வேண்டுமானாலும் அதனால் ஈர்க்கப்பட்டு, பயங்கரவாதத்தை நோக்கி செல்லக்கூடிய அபாயம் இருக்கிறது.

  • There're 2 types of Muslims.
    1.Pro-terrorism,pro-jihad,pro-fundamentalism,anti-women,anti-democracy, anti-free speech, anti-secularism.
    2. Anti-terrorism, anti-jihad, anti-fundamentalism, pro-women, pro-democracy, pro-free speech, pro-secularism.
    You know which group is yours.

    — taslima nasreen (@taslimanasreen) August 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கேள்வி: அடிப்படைவாதத்தை 'மதராஸா'-க்கள் பரப்புவதாக நினைக்கிறீர்களா?

பதில்: சில மதராஸாக்கள் கல்வியைக் கற்பிக்காமல், மதம் சார்ந்த விஷயத்தை விதைக்கின்றன. அரசு இதனை கண்டுகொள்ள வேண்டும். இனி, அரசின் கட்டுப்பாடு இதில் அவசியமாகிறது.

கேள்வி: இந்த அரசு (இந்திய அரசு) இதில் சிலவற்றைக் கட்டுப்படுத்துகிறது என நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: நான் இந்த அரசு குறித்துப் பேசவில்லை. உலகில் உள்ள அரசாங்கங்களை குறித்துப் பேசுகிறேன். உலகம் முழுவதும் மதராஸாக்களின்கீழ் மூளைச்சலவை நடைபெறும் நிலையில், எல்லா நாடுகளும் அங்குள்ள மதராஸாக்களை கண்காணிக்க வேண்டியுள்ளது. அதன் மூலம், அவர்களைக் கட்டுப்படுத்த முடியும். ஏனென்றால், பயங்கரவாதம் என்பது ஒரு சிந்தனை, அதை சிந்தனை சார்ந்த முறையில்தான் தடுக்க முடியும். ஒரு பயங்கரவாதியைக் கொல்வதன் மூலம் பயங்கரவாதத்தைத் தடுத்துவிட இயலாது. அதுகுறித்த சிந்தனையை நிர்மூலமாக்குவதன் மூலமே நம்மால் அதைச் சாதிக்க முடியும். அதில் மதராஸாக்களை கட்டுப்படுத்துவதும் ஒரு வழி. பயங்கரவாதம் எளிதாக பரவக்கூடியது, அந்த சிந்தனை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவி, அது தன் வேர்களை பரப்பிக்கொள்கிறது.

மூவர்ணக்கொடியுடன் தஸ்லிமா நஸ்ரின்
மூவர்ணக்கொடியுடன் தஸ்லிமா நஸ்ரின்

கேள்வி: பயங்கரவாதத்தைக் குறித்த பேச்சை எடுத்தால், ஏன் நாம் அனைவரும் இஸ்லாம் மதத்தோடு நின்றுவிடுகிறோம்?

பதில்: ஏனென்றால், இஸ்லாம் சீர்திருத்தப்படவில்லை. பரிணாமம் பெறவில்லை. விமர்சன கருத்துகளுக்கு அங்கே இடமேயில்லை. நாம் சீர்திருத்தம் குறித்துப் பேசினால், கொல்லப்படுவோம். சீர்திருத்தம் செய்ய எவ்வித விமர்சனமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றால், நாம் எப்படி ஆண், பெண் சமத்துவத்தைக் குறித்துப் பேசுவது?. மதத்தின் சட்டங்கள் மனித உரிமை சார்ந்தும், நீதி சார்ந்தும் இருக்க வேண்டும். இதுகுறித்தெல்லாம், ஒருவர் பேச முற்பட்டால் அவனோ/அவளோ கொல்லப்படுகிறார்கள். அரசு இதைத் தடுக்கவே தடுக்காது. இஸ்லாமிய நாடுகளின் அரசுகள் தங்களின் அரசியல் லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்துகின்றன. அதனால், மதத்தையும், அரசையும் இஸ்லாமிய நாடுகள் ஒருபோதும் பிரிக்க மறுக்கின்றன. நவீன சட்டங்களை அந்த நாடுகளில் நடைமுறைப்படுத்த எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 7ஆம் நூற்றாண்டின் சட்டங்களை அவர்கள் கடைபிடிக்கின்றனர். அதில் மாற்றம் செய்ய எந்த அரசும் முன்வராது. ஏனென்றால், அந்த மதச்சட்டங்களினால் அவர்களுக்கு அதிகப்பலன் கிடைக்கிறது அல்லவா... இஸ்லாம், இப்போது 'இஸ்லாம்' இல்லை 'அரசியலாக்கப்பட்ட இஸ்லாம்' ஆக மாறிவிட்டது. இந்த மாற்றம் மிகவும் அபாயகரமானது. மதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க அவர்களுக்கு எப்போதும் 'ரத்தம்' தேவைப்படும்.

கேள்வி: சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் ஒட்டுமொத்த சகோதரத்துவத்தின் மீதான தாக்குதலாகப் பார்க்கிறீர்களா?

பதில்: எல்லா எழுத்தாளர்களும் தாக்கப்படுவதில்லை. இஸ்லாமியத்தில் சீர்த்திருத்த நினைக்கும் எழுத்தாளர்கள்தான் எப்போதும் கொல்லப்படுகிறார்கள். எனக்கு மேலேயும் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. என் தலைக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்பிரச்னை இல்லை. சிலர்தான் ஆபத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். சல்மான் ருஷ்டியின் தாக்குதல், சில இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்பட்டுள்ளது. அது கவலைக்குரியது. பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-லப்பை என்ற வலதுசாரி இயக்கத்தின் தலைவர் ஸாட் ரிஸ்வி,"சல்மானை முடித்துவிட்டோம். அடுத்து தஸ்லிமாவைத் தான் கொல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார். பாகிஸ்தானின் 20 லட்சம் குடிமக்கள் இந்தப் பேச்சைக் கேட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, ட்விட்டரில் மீண்டும் எனக்கு கொலை மிரட்டல் வரத்தொடங்கிவிட்டது. அடுத்தது நான்தான் எனக் கூறுகின்றனர். சல்மான் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில், பெரும் பாதுகாப்புக்கு இடையில் இருக்கிறார், அதனால் அவர் தப்பித்துவிட்டார். இஸ்லாமை நவீனப்படுத்தவும், சீர்திருத்தவும் நினைக்கும் பெரும்பாலான எழுத்தாளர்கள் மிகுந்த ஆபத்தில்தான் இருக்கின்றனர். ஏனென்றால், அவர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை, அடிப்படைவாதிகளுக்கு எளிதாக இரையாகிவிடுகிறார்கள். அதனால்தான், பேச்சு சுதந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களையும், இஸ்லாமியத்தின் அடிப்படைவாத கருத்துருவாக்கத்திற்கு எதிரானவர்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது.

  • This religious leader wanted to kill me and he inspired millions of Pakistani extremists to kill me in the name of Islam. He claimed he read my book, but of course, he didn't. He lied. https://t.co/7aH93QINXW

    — taslima nasreen (@taslimanasreen) August 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கேள்வி: நூபுர் ஷர்மாவுக்கு எதிராக இந்தியாவிலும் இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அதற்கு உங்கள் எதிர்வினை என்ன?

பதில்: என் மீது பல தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. பல்வேறு மிரட்டல்களும் சுற்றிவருகின்றன. இஸ்லாமை சீர்திருந்த நினைப்பவர்கள் அதிகமாக தாக்கப்படுகிறார்கள். அதேதான் நூபுர் ஷர்மா விவகாரத்திலும் நடக்கிறது. உதயப்பூரில் கன்னையாவை இவர்கள் கொன்ற விதம் என்பது மிகவும் ஆபத்தானது. அவர்களின் மதம் பலவீனமானதா, அதைக்காக்க இவர்கள் மற்றவர்களை கொலை செய்கிறார்களா? இது அவர்களின் மதம் பலமற்று கிடப்பதைத்தான் உறுதி செய்கிறது. இஸ்லாமிய மதத்திற்கு இது நல்லதல்ல.

கேள்வி: சல்மான் ருஷ்டிக்கு நீங்கள் ஏதேனும் சொல்ல நினைக்கிறீர்களா?

பதில்: இதுபோன்ற வன்முறைக்கு நான் எதிரானவர். இதுபோன்ற நடக்கத்தொடங்கியதில் இருந்து, நான் எப்போதும் வன்முறையை எதிர்த்து வந்துள்ளேன்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்

Last Updated : Aug 17, 2022, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.