ETV Bharat / bharat

8 மாதங்களுக்கு பிறகு முதல் கரோனா உயிரிழப்பு - பரவல் அதிகரிக்கிறதா?

author img

By

Published : Mar 11, 2023, 6:27 AM IST

8 மாதங்களுக்கு பிறகு கரோனா தொற்றால் மூதாட்டி உயிரிழப்பு!
8 மாதங்களுக்கு பிறகு கரோனா தொற்றால் மூதாட்டி உயிரிழப்பு!

சூரத்தில் ஏறத்தாழ 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கரோனா பரவலுக்கு மூதாட்டி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

சூரத்: குஜராத் மாநிலத்தின் சூரத் நகருக்கு அருகே உள்ள காப்டோரா பகுதியில் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 12 நாட்களாக சுவாசப் பிரச்னை இருந்துள்ளது. அதேநேரம் பாதங்கள் வீக்கத்துடன் காணப்பட்டுள்ளது. இதனால் கடந்த 9 ஆம் தேதி சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் மருத்துவமனையில் மூதாட்டி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையில் மூதாட்டிக்கு கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 10) மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக மூதாட்டி உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்தபோது, அவருடன் தொடர்பில் இருந்த அனைத்து குடும்பத்தினருக்கும் தற்போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், அதிர்ஷ்டவசமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று இல்லை என முடிவு வெளி வந்துள்ளது. மேலும் சூரத்தில் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2022 ஜூலை மாதத்தில் தான் கரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டதாக பதிவாகி இருக்கிறது.

மேலும் இது தொடர்பாக சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் மருத்துவமனையின் துணை சுகாதார அதிகாரி ரித்திகா படேல் கூறுகையில், "கரோனா தொற்றால் உயிரிழந்த மூதாட்டிக்கு ஏற்கனவே சிறுநீரகப் பிரச்னை, நீரிழிவு நோய் மற்றும் இருதய பாதிப்பு ஆகியவை இருந்துள்ளது. நேற்று முன்தினம் அவருக்கு மேற்கொண்ட ரேப்பிட் ஆண்டிஜென் டெஸ்ட் முடிவில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த வாரத்தில் சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் மருத்துவமனையில் 5 பேர் கரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 பேர் கடந்த 2 நாட்களில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 400 முதல் 450 கரோனா பரிசோதனை சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது.

இவை தவிர, கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சுகாதார வழிமுறைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையங்கள் அல்லது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என கூறினார்.

மேலும் தற்போது நாட்டில் உள்ள பெரும்பான்மையான மாநிலங்களில் ஹெச்3என்2 (H3N2) என்ற இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இதில் பெரும்பாலும் இருமல் மற்றும் தொண்டை பிரச்னையால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக ஆண்டிபயோடிக் மற்றும் ஆண்டி அலெர்ஜிக் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

அதேநேரம் கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இருவர் இந்த ஹெச்3என்2 வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: H3N2 Virus: நாட்டில் இன்புளுயன்சா வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு - சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.