ETV Bharat / bharat

கண்துடைப்புக்காக நியமிக்கப்பட்டதா மத்திய அரசின் கரோனா பணிக்குழு?

author img

By

Published : May 10, 2021, 9:49 PM IST

Covid
Covid

இந்திய அரசியலமைப்பின் 355ஆவது பிரிவின்படி, ஒவ்வொரு மாநிலத்தையும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டு குழப்பங்களிலிருந்து பாதுகாப்பதும், ஒவ்வொரு மாநிலத்தின் அரசாங்கமும் அரசியலமைப்பின் விதிகளின்படி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதும் மத்திய அரசின் கடமையாகும்.

கரோனா பரவலின் இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகளால், மாநிலங்கள் சிக்கலில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், மத்திய அரசின் செயல்பாடுகள் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் 741 மாவட்டங்களில் அமைந்துள்ள 301 இடங்களில் கோவிட் பாதிப்பு விகிதம் 20 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நோய்த்தொற்று அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட் மற்றும் பிற மாநிலங்கள் வழியாகப் பயணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படுக்கைக்கும் குறைந்தபட்சம் 30 நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள் என்பதிலிருந்து கர்நாடகாவின் நிலைமையை அறியலாம். நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான குழு நிர்ணயித்த மாதிரியின் அடிப்படையில் மாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை ஒதுக்கப்படுகிறது என்ற மத்திய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக 12 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய பணிக்குழுவை நியமிக்க உச்ச நீதிமன்றம் முன்முயற்சி எடுத்தது. கடந்த மார்ச் மாதம் 21 உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தாலும், குழு வெறும் அலங்காரமாகவே இருந்தது.

நாட்டில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 500ஆக இருந்த நேரத்தில் மத்திய அரசு தேசிய ஊரடங்கை அறிவித்தது. இன்று தினசரி வழக்குகள் நான்கு லட்சத்தைத் தாண்டியிருக்கும் நிலையில் அரசாங்கம் வெறும் பார்வையாளராக இருப்பதன் மூலம், இப்பணிக்குழுவின் பயனற்ற தன்மையை அறிய முடியும்.

கணக்குகளின் அடிப்படையில் கரோனா வைரஸ் தீவிரத்தை மதிப்பிடுவதற்கு கடந்த மே மாதம் ஒரு சூப்பர் மாடல் குழு நியமிக்கப்பட்டது. வரவிருக்கும் இரண்டாவது தொற்றுநோய் குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள எச்சரிக்கையை மத்திய அரசு கவனிக்கவில்லை. நாட்டையே இந்த அலை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே சரியான திசையைக் காட்ட முடியும்.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை இந்தியா மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளதாகவும், நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் வெற்றிகரமான நாடுகளின் வரிசையில் இந்தியா நிற்கிறது என்றும் பிரதமர் மோடியே ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.

கடந்த டிசம்பரில், கரோனா வைரஸின் பிறழ்வுகளைப் பற்றி ஆய்வு செய்ய 10 சிறந்த அமைப்புகளுடன் ‘மரபியல் கூட்டமைப்பு’ அமைக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது. இந்தக் கூட்டமைப்பு, வைரஸ் விரைவில் மீண்டும் எழுச்சி பெறும் என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திற்கு (NCDC) ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது.

ஆனால், முரண்பாடாக, கோவிட் நாட்டிலிருந்து மறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் மார்ச் முதல் வாரத்தில் அறிவித்த இரண்டு நாள்களுக்குப் பிறகு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறுவதை நம்ப முடியவில்லை என்று, செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் முன்னாள் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆய்வு அறிக்கைகளின் பின்னணியில், மக்களிடையே வைரஸ் அதிகமாகப் பரவி வருவதால் அது இன்னும் ஆபத்தான பிறழ்வுகளுக்கு உட்படும் என்றும், கரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை வரவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப ஆக்ஸிஜன் விநியோகத்தை உறுதி செய்வதற்கான அறிவியல் மற்றும் நியாயமான கொள்கையை உருவாக்கும் பொறுப்பை உச்ச நீதிமன்றம் தற்போது தனது பணிக்குழுவிடம் ஒப்படைத்துள்ளது. அவசர காலத்தில் தேவைப்படும் மருந்துகள் கிடைப்பதில் பணிக்குழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் விரும்புகிறது. இந்தப் பணிக்குழுவில், தொற்று நோய் நிபுணர்கள் மற்றும் வைராலஜிஸ்டுகள் ஆகியோருக்கும் இடமளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் அறிவியலாளர்களின் அறிவுறுத்தல்களுடன் பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து மிகப்பெரிய வேள்வியைப்போல் தொடர வேண்டும். ஆனால், அரசாங்கம் இந்த பொறுப்பிலிருந்து தோல்வியுற்று, நீதித்துறையின் வழிகாட்டுதல்களை தற்போது தேடிக்கொண்டிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.