ETV Bharat / bharat

EXCLUSIVE: 'பிரதமர் மோடிக்கு சுயமரியாதை இருந்தால் சீனா செல்லமாட்டார்' - பாஜக எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி

author img

By

Published : Mar 30, 2022, 5:52 PM IST

Subramanian Swamy interview by ETV Bharat
Subramanian Swamy interview by ETV Bharat

பிரதமர் மோடிக்கு சுயமரியாதை இருந்தால், சீனா செல்லமாட்டார் என்றும் 'குவாட்' அமைப்பில் இந்தியா இருக்கும்போது, 'பிரிக்ஸ்' என்பது தேவையே இல்லை என்றும்; பாஜக மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி, 'ஈடிவி பாரத்' ஊடகத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் காட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்ய - உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு, பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அவர் அளித்துள்ள விரிவான பேட்டியை இங்கு காணலாம்.

டெல்லி: ரஷ்ய - உக்ரைன் போர் ஒரு மாதத்தைத் தாண்டி தொடர்ந்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். 40 லட்சத்திற்கும் அதிகமானோர் உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 100 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைன் உள்ளேயே புலம்பெயர்ந்துள்ளனர்.

ரஷ்ய - உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்பது சற்று பாதுகாப்பான வெளிப்பாடாகவே இருந்து வருகிறது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு முயல்களுடன் ஓடுகிறதா அல்லது வேட்டையாடிகளுடன் இணைந்து வேட்டையாடுகிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை.

இதுகுறித்து, நமது 'ஈடிவி பாரத்' ஊடகம், பாஜக மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமியிடம் நேர்காணல் கண்டது.

புதின் ஒரு சர்வாதிகாரி: ரஷ்யா குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "ரஷ்யா, தன்னை ஒரு வல்லாதிக்க நாடாக நினைக்கும் நாடு (அதாவது சோவியத் யூனியனாக இருந்தபோது), எந்த விதத் தூண்டுதலும் இல்லாத தாக்குதல்தான் இது. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ரஷ்யா என்பது ஒரு சிறு பகுதிதான். ரஷ்யாவின் இந்த ராணுவத் தாக்குதல் என்பது அதிபர் புதின் ஒரு சர்வாதிகாரி என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோளை அடுத்து, அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி செய்துவருகின்றன. புதின், சர்வதேச விதிகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் மீறி உக்ரைனை கைப்பற்ற முயற்சிக்கிறார்" என்றார்.

EXCLUSIVE: 'பிரதமர் மோடிக்கு சுயமரியாதை இருந்தால் சீன செல்லமாட்டார்' - பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி

ஐ.நா.வால் பயனில்லை: தற்போதைய நிலவரத்தில், ஐக்கிய நாடுகளின் சபையின் பங்கு குறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், "ஐ.நா. தீவிரமான நடவடிக்கைக்கு உரிய இடமாக நான் நினைக்கவில்லை. சிறிய நாடுகளில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கவே, ஐ.நா.வின் அமைதி காக்கும் குழு பயனளிக்கும். அதேபோன்று, நிரந்தர உறுப்பினரான நாடுகளில் (P5) ஏற்படும் பிரச்னை என்றால் அவை ஏதும் பயனளிக்காது.

சொல்லப்போனால், ரஷ்யாவின் உறுப்பினர் பதவி என்பது சட்டவிரோதமானதாகவே உள்ளது. ஏனென்றால், சோவியத் யூனியன் என்ற பெயரில் தான் நிரந்தர உறுப்பினர் பதவி பெறப்பட்டுள்ளது. ஐ.நா.வின் பட்டியலில் ரஷ்யா என்ற பெயரே இல்லை. சோவியத் யூனியன் என்றுதான் உள்ளது. ஆனால், அந்த சோவியத் தற்போது இல்லை" எனத் தெரிவித்தார்.

உக்ரைனுக்குத்தான் ஆதரவு: போர் குறித்து ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,"நாம் ரஷ்யாவில் இருந்து ஆயுதங்களை வாங்குகிறோம். இதனாலேயே, ரஷ்யா என்றும் இந்தியாவுக்கு உதவுகிறது என்ற கருத்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.

உண்மையாக, ரஷ்யா என்றுமே இந்தியாவின் பக்கம் நின்றது இல்லை. ஏனென்றால், ரஷ்யாவின் தோற்றமே சோவியத் உடைந்து பின்னர் வந்ததுதான். தற்போது போர் என்பது மனித உரிமை தொடர்பான பிரச்னையைக் கொண்டது. ரஷ்யா உக்ரைன் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்துள்ளது. நாம் உக்ரைனுக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும்" எனப் பதிலளித்தார்.

சீன அமைச்சரை அனுமதித்தது ஏன்?: சமீபத்தில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, முதல்முறையாக பாகிஸ்தானில் இஸ்லாமிய மாநாடு அமைப்பின் சார்பாக நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு, காஷ்மீர் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். இதற்கு இந்தியாவும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், அதைத்தொடர்ந்து சீன அமைச்சர் ஆப்கான் தலைநகர் காபூலுக்குச் சென்று ஐ.நா.வால் பயங்கரவாதி எனக் குறிப்பிடப்பட்ட சிராஜூதீன் ஹக்கானியை சந்தித்தார். அதன்பின்னர், அவர் டெல்லிக்கும் வந்தார். இதுகுறித்து, சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்டபோது, 'இந்திய அரசு ஏன் சீன அமைச்சரை இந்தியா வர அனுமதித்தது' என சீற்றமடைந்தார்.

காஷ்மீர் நம்முடையது: அவர் கூறியதாவது, "சீன அமைச்சர் வாங் யி, ஹக்கானியை காபூலில் சந்தித்தபோது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள சாலைப்பணிகளை (Belt and Road Initiative - BRI) செயல்படுத்துவது குறித்துப் பேசியுள்ளார்.

Subramanian Swamy interview by ETV Bharat
பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி

மொத்த காஷ்மீர் பகுதியும் நம்முடையது. சீன அமைச்சரை இந்தியா அழைக்கவில்லை என்றாலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அவரைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிவிட்டனர்" என்றார்.

குவாட் போதும் - பிரிக்ஸ் தேவையில்லை: இதற்கிடையில், வரும் ஜூன் மாதம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற இருக்கும் 'பிரிக்ஸ்' மாநாட்டில் மோடி கலந்துகொள்வாரா என்ற கேள்விக்கு, "மோடிக்கு சுயமரியாதை இருந்தால், அங்கு செல்லமாட்டார். 'பிரிக்ஸ்' (BRICS) என்பது தேவையே இல்லை.

இந்தியாவுக்கு கொள்கை இருக்கா? : 'குவாட்' (QUAD) அமைப்பில் இருக்கும் போது 'பிரிக்ஸ்' எதற்கு?. ஏன் இரண்டு அமைப்புகளிலும் இருக்க வேண்டும்?" என்று அவர் கூற, ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியதில் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு குறித்து கேட்டோம்.

அதற்கு, "இந்தியாவிற்கு கொள்கை இருக்கிறதா?. நாம் ஆப்கான் சென்று அங்கு முதலீடு செய்தோம். உள்கட்டமைப்புகளையும், நாடாளுமன்றத்தையும் கட்டியெழுப்பினோம். அப்படியிருக்க, அமெரிக்கா அங்கு பின்வாங்கிய பின்னர் அனைவரும் திருப்பி அழைக்கப்பட்டுவிட்டனர்" என்று அதிரடியாகப் பதிலளித்தார்.

இந்தியாவுக்கு இதில் பங்கில்லை: மேலும், ‘ரஷ்ய - உக்ரைன் போர் நடைபெற்றுவரும் சூழலில், மார்ச் 31 அன்று (நாளை) ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை செயலாளரும் டெல்லி வருகின்றனர். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், போரில் தற்போது இந்தியாவின் பங்கு என்ன’ என்று கேள்வி எழுப்பினோம்:

"இதில் இந்தியா என்ன செய்ய முடியும்?. இதில் இந்தியாவின் பங்கு என்ற ஒன்றே இல்லை. நாம் உக்ரைனுக்கும் ஒன்றும் கொடுக்க முடியாது. ரஷ்யாவுக்கு, அவர்களின் உக்ரைன் தாக்குதலை இந்தியா சட்டப்பூர்வமாய் ஏற்பதைத் தவிர வேறெதையும் நாம் வழங்க முடியாது" என்றார்.

ஆர்எஸ்எஸ் இல்லாமல் பாஜக இல்லை: கடைசி கேள்வியாக, ‘பிரதமர் மோடி குறித்து உள்ள சர்வேதச தலைவர் என்ற கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்’ எனக் கேட்டோம். "அவர் புத்திசாலி. வலிமையான தலைவர் என்று நினைக்கும்போது, அவர் தேர்தலில் வெற்றியும் பெறுகிறார். அவருக்கு குவாட் அமைப்பில் இருக்கும்போதே, பிரிக்ஸ் அமைப்பிலும் இருக்க வேண்டும் என நினைக்கிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பு இல்லையென்றால் பாஜக ஒன்றுமே இல்லை. ஆர்எஸ்எஸ் பெரும்பாலும் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது" எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தலில் களமிறங்குகிறாரா பிரியங்கா காந்தியின் கணவர்? - இடிவி பாரத்திற்கு பிரத்யேகப் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.