ETV Bharat / bharat

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள்; இன்று துவங்கியது முன்பதிவு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 7:40 PM IST

Updated : Dec 20, 2023, 9:41 PM IST

முன்பதிவுகள் இன்று தொடங்கின
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்

special trains to Sabarimala: சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் இன்று காலை தொடங்கியது.

செகந்திராபாத்: கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, சபரிமலைக்குச் செல்வது வழக்கம். கடந்த வருடங்களை ஒப்பிடுகையில் இந்த வருடம் சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்படுவதாகச் செய்திகள் வெளியாகின.

இந்தக் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இந்த நிலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலைச் சமாளிக்கச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதை அடுத்து, இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் இன்று (டிச.20) தொடங்கியுள்ளது.

செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு ரயில்: செகந்திராபாத்தில் இருந்து கொல்லம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 07111) செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து டிச.27 மற்றும் ஜனவரி 3, 10, 17 ஆகிய நான்கு தேதிகளில் இயக்கப்பட உள்ளது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.40 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் இரவு 11.55 மணிக்குக் கேரள மாநிலம் கொல்லம் ரயில் நிலையத்திற்குச் சென்றடையும்.

அதைத் தொடர்ந்து மறுமார்க்கமாக கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து டிச.29, ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 2.30 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில் (வண்டி எண்: 07112) காலை 9.40 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

காக்கிநாடா - கோட்டயம் சிறப்பு ரயில்: டிச.28 மற்றும் ஜனவரி 4,11,18 ஆகிய தேதிகளில், காக்கிநாடா ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.40 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (வண்டி எண்: 07113), மறுநாள் இரவு 10 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்திற்குச் சென்றடையும்.

மறுமார்க்கமாக கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து, டிச.30 மற்றும் ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில், நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 07114) அதிகாலை 4 மணிக்கு காக்கிநாடா ரயில் நிலையத்தை வந்தடையும்.

செகந்திராபாத் - கோட்டயம் சிறப்பு ரயில்: ஜனவரி 2 ஆம் தேதி செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து, மாலை 3.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (வண்டி எண்: 07117), மறுநாள் இரவு 10.05 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்திற்குச் சென்றடையும்.

மறுமார்க்கமாக கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து, ஜனவரி 4 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில் (07118) அதிகாலை 5 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையம் வந்தடையும்.

செகந்திராபாத் - கோட்டயம் சிறப்பு ரயில்: ஜனவரி 6, 13 ஆகிய இரு தேதிகளில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து, மாலை 6.40 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (07009), மறுநாள் இரவு 10.05 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்திற்குச் சென்றடையும்.

மறுமார்க்கமாக கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 8, 15 ஆகிய தேதிகளில், நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (07010) அதிகாலை 5 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையம் வந்தடையும்.

இதையும் படிங்க: சபரிமலையில் என்ன நடக்கிறது..? அதற்கான தீர்வுதான் என்ன..?

Last Updated :Dec 20, 2023, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.