ETV Bharat / bharat

கர்நாடக CMஆக சித்தராமையா, DCMஆக டிகேஎஸ் - வெளியானது அதிகாரப் பூர்வ அறிவிப்பு!

author img

By

Published : May 18, 2023, 11:52 AM IST

Updated : May 18, 2023, 12:38 PM IST

Siddaramaiah to be next Karnataka CM, DK Shivakumar to be DCM
கர்நாடக புதிய முதலமைச்சராக சித்தராமைய்யா - துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் சனிக்கிழமை பதவியேற்பு

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவகுமாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி : மழை விட்டபிறகும் இன்னும் தூவானம் விடவில்லை என்பது போல, கர்நாடக சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 135 இடங்களில் வெற்றி பெற்று, அறுதிப் பெரும்பான்மை பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்து உள்ள நிலையிலும், இன்னும் அங்கே, முதலமைச்சர் யார் என்பது இழுபறியாகவே நீடித்து வந்தது.

புதிய முதலமைச்சர் யார் என்ற தேர்வு, சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மீண்டும் சித்தராமையாவும், துணை முதலமைச்சராக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சர் தேர்வு விவகாரத்தை கையாண்டு வருகிறார். புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா, மே 20ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, '' கர்நாடகத்தில் முதலமைச்சராக சித்த ராமையா காங்கிரஸ் கட்சியால் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், கர்நாடகத்தின் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் செயல்படுவார். அதேபோல், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் நீடிப்பார். கட்சியில் தகுதிவாய்ந்த தலைவர்கள் பலரும் இருப்பதால், முதலமைச்சரை தேர்வு செய்வதில், சிறிது தாமதம் ஏற்பட்டது. ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே முதலமைச்சர் தேர்வு நடைபெற்றுள்ளது’’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதற்குப்பிறகு, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று (மே18ல்) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடைபெற உள்ளது. இதற்காக, மத்திய பார்வையாளர்கள், பெங்களூருவுக்கு விரைந்து உள்ளனர். இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கர்நாடக மாநில அமைச்சர்கள் தேர்வு குறித்தும் பேசவுள்ளனர்.

குறிப்பாக, இக்கூட்டமானது, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில், பெங்களூருவில், நடைபெறுகிறது. டெல்லியில், கட்சி மேலிடம் அறிவுறுத்திய தகவல்கள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், அனைத்து எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை கவுன்சில் உறுப்பினர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என சிவக்குமார் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் மேலிட பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். புதிய முதலமைச்சர் மற்றும் புதிய அமைச்சர்கள், சனிக்கிழமை பதவியேற்க உள்ளனர்.

இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு? பாலாபிஷேகம், பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!

Last Updated :May 18, 2023, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.