இருமுறை பிரதமரானது போதாதா? - எதிர்க்கட்சித் தலைவரின் அறிவுரைக்கு பிரதமர் மோடி மாஸ் பதில்!

author img

By

Published : May 13, 2022, 10:26 PM IST

pm-modi

ஓய்வு எடுக்கும்படி பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் அறிவுரை வழங்கியதாகவும், ஆனால் தான் ஓய்வு எடுக்க விரும்பவில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்: குஜராத் மாநிலத்தின் பரூச் மாவட்டத்தில், ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவி உள்ளிட்ட மாநில அரசின் நான்கு முக்கிய திட்டங்கள் 100 விழுக்காட்டுப் பயனாளிகளை சென்றடைந்ததைக் கொண்டாடும் வகையில், நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "ஒரு நாள் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் என்னை சந்தித்தார். அவர் அரசியல் ரீதியாக எங்களை எதிர்ப்பவர். ஆனால் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. மத்திய அரசின் சில நடவடிக்கைகள் அவருக்கு பிடிக்கவில்லை, அதுதொடர்பாக என்னை சந்திக்க வந்தார்.

அப்போது, 'இந்த நாடு உங்களை இரண்டுமுறை பிரதமராக்கி உள்ளது. இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று என்னிடம் கேட்டார். இரண்டு முறை ஒருவர் பிரதமர் ஆகிவிட்டால், அனைத்தும் சாதித்துவிட்டதாக அர்த்தம் என்பதுபோல் அவர் பேசினார். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அவருக்கு என்னைப் பற்றி தெரியவில்லை. குஜராத் மண் என்னை உருவாக்கியது. அதனால் இருமுறை பிரதமரானால் போதும் என்ற மனநிலை எனக்கு ஏற்படவில்லை. அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும், 100 விழுக்காடு மக்களை சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது கனவு. அதை அடையும் வரை நான் ஓய்வு எடுக்கமாட்டேன். குஜராத் மக்கள் என்னை டெல்லிக்கு அனுப்பி எட்டு ஆண்டுகள் ஆகின்றது. இந்த எட்டு ஆண்டுகளும் நாட்டுக்கான சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் உள்ளிட்டவற்றிற்காகவே எனது வாழ்வை அர்ப்பணித்தேன்" என்று தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்த சில வாரங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிறுமியின் பதிலைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.