ETV Bharat / bharat

"ரூ.9,700 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை" - ஆர்பிஐ பகீர் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 4:03 PM IST

RBI
RBI

9 ஆயிரத்து 760 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

டெல்லி : கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதையடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதனிடையே, புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கடந்த மே 19ஆம் தேதி திடீரென திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இதற்காக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கால அவகாசம் வழங்கிய ரிசர்வ் வங்கி அதன் பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் உடனடியாக வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும் அல்லது மாற்றவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.

இந்த நிலையில், 9 ஆயிரத்து 760 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் நோட்டுகள் திரும்பப் பெறவில்லை என்றும் இன்னும் அவை புழக்கத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் ஏறத்தாழ 97 புள்ளி 26 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்ட போது நாடு முழுவதும் 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், தற்போது வங்கிகளின் டெபாசிட் ஆன தொகையை கழித்ததில் 9 ஆயிரத்து 760 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வராமல் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற விரும்புபவர்கள் அகமதாபாத், பெங்களூரு, பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கவுகாத்தி, ஐதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மத்திய ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களையும் அணுகலாம் எனத் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

மேலும், இந்திய அஞ்சல் நிலையங்கள் மூலமாகவும் மக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அனுப்பி அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பெங்களூரில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.