இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராகிறார் பி.டி. உஷா...!

author img

By

Published : Nov 28, 2022, 11:45 AM IST

பி.டி.உஷா

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகிறார். இதன் மூலம் 95 ஆண்டு கால இந்திய ஒலிம்பிக் சங்க வரலாற்றில் பெண் ஒருவர் தலைவர் பதவிக்கு தேர்வாகிறார்.

டெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. தலைவர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 24 பேர் மனு தாக்கல் செய்தனர்.

கேரளாவைச் சேர்ந்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா குழுவைச் சேர்ந்த 14 பேர் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். தலைவர் பதவிக்கு பி.டி. உஷாவை தவிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நேற்று மாலையுடன் மனு தாக்கலுக்கான கால அவகாசம் முடிந்தது.

இதையடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தடகள மங்கை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாக உள்ளார். இதன் மூலம் 95 கால இந்திய ஒலிம்பிக் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவராக பதவியேற்கும் சரித்திர சாதனையை பி.டி.உஷா படைக்கிறார்.

கேரளா மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த பி.டி. உஷா, இந்திய தடகள உலகில் "தங்க மகள்" "வேக ராணி" மற்றும் "பய்யோலி எக்ஸ்பிரஸ்" என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். 58 வயதான பி.டி. உஷா ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார்.

பல்வேறு ஆசியப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள பி.டி.உஷா, 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

கடந்த 1986ஆம் ஆண்டு தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்த தடகள போட்டியில் வென்ற நான்கு தங்கம் உட்பட ஆசியப் போட்டிகளில் 11 பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் 1983 முதல் 1998ஆம் ஆண்டு வரையிலான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 14 தங்கங்கள் உட்பட 23 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல், டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஒரு துணைத் தலைவர் (பெண்), இணைச் செயலாளர் (பெண்) பதவிகளுக்குப் போட்டி இருக்கும் என்றும் நான்கு செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 12 பேர் போட்டியில் இருப்பதாகவும் தேர்தல் நடத்தும் குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "கே.சி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் ஐ.டி. ரெய்டு இருக்காது" - தெலங்கானா அமைச்சர் பேச்சு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.