ETV Bharat / bharat

போதைப்பொருள் விற்பவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

author img

By

Published : Aug 31, 2021, 10:38 PM IST

முதலமைச்சர் ரங்கசாமி
முதலமைச்சர் ரங்கசாமி

போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி: மாநிலத்தின் 15ஆவது சட்டபேரவைக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று, பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது,

தியாகராஜன், திமுக உறுப்பினர்: ''விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் இடுபொருள் தட்டுப்பாடு உள்ளது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகையும் வழங்கப்பட வேண்டும். ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

காரைக்கால் பகுதியில் சுழற்சி முறையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மருத்துவமனைகளை முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு வர 150 கி.மீ., தொலைவில் இருக்கிறது. சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி காரைக்காலில் இல்லை. ஆம்புலன்ஸ் மிக மோசமாக உள்ளது. அதாவது 5 ஆம்புலன்ஸ்கள் வழங்க வேண்டும்.

காரைக்கால் பகுதியில் மக்கள் மருத்துவ சேவைகளுக்காக புதுச்சேரிக்கு சென்ற காலம் போக, தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திற்குச் செல்கிறார்கள்.

காரைக்காலில் கட்டப்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனை பணிகளை வேகப்படுத்த வேண்டும். இங்கிருக்கும் தொழிற்சாலைகளில், உள்ளூர் இளைஞர்களுக்கு 70 விழுக்காடு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 30 விழுக்காடு வேலைகளை பிற மாநிலத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

கல்யாணசுந்தரம், பாஜக உறுப்பினர்: காவல் நிலையங்களில், நீண்ட நாட்களாக காவலர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளனர். இதில் குற்றம் செய்பவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். அதனால் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு காலவர்களை இடமாற்றம் செய்யவேண்டும்.

காலப்பட்டு பகுதியில் உள்ள மருத்துவமனை ஹாசன் கம்பெனி, கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. ப்ளஸ் 1 படிக்கும் சிறுவர்கள் கூட கஞ்சா பயன்படுத்துகிறார்கள். இதனால் குற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

இதனைத் தொடர்ந்து, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜான்குமார், ரிசர்ச், திமுக உறுப்பினர்கள் தியாகராஜன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, நாஜிம், சுயேச்சை உறுப்பினர் சிவா உள்ளிட்டோர் போதைப்பொருள்களால் புதுச்சேரி மாநிலத்தில் அதிக குற்றங்கள் நடைபெறுகிறது.

போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

முதலமைச்சர் ரங்கசாமி : உறுப்பினர்களின் எண்ணம் தெளிவாகப் புரிகிறது. கஞ்சா விற்பனையால் கடந்த சில ஆண்டுகளாக பலர் போதைக்கு அடிமையாகி உள்ளனர். விபத்துகள் அதிகரித்துள்ளன. போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையின் மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு உறுப்பினர்கள் அனைவரும் கரவொலி எழுப்பினர்.

சிவா, சுயேச்சை உறுப்பினர்: புதுச்சேரியில் நிலஅபகரிப்பு செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

சிவா, பாஜக உறுப்பினர் : புதுச்சேரியில் சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளது'' என அடுத்தடுத்துதெரிவித்தனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி சபாநாயகருக்கு திடீர் நெஞ்சுவலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.