ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி, 200 கோடி டோஸ் மைல்கல்: 'வருங்கால தலைமுறை பெருமைப்படும்' - பிரதமர் கடிதம்

author img

By

Published : Jul 20, 2022, 11:40 AM IST

பிரதமர் கடிதம்
பிரதமர் கடிதம்

கரோனா தடுப்பூசியில் இந்தியா 200 கோடி டோஸ் மைல்கல்லை அடைந்துள்ள நிலையில், வருங்கால தலைமுறையினர் நம்மைக்கண்டு பெருமையடைவார்கள் என பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 200 கோடியை கடந்துவிட்டதாக ஜூலை 17ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

18 மாதங்களில் 200 கோடி டோஸ்கள் போடப்பட்டதற்கு யூனிசெஃப் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தன. கரோனா தொற்றுக்கு எதிராக மிகப்பெரும் மக்கள்தொகையை கொண்டுள்ள இந்தியாவின் முன்னெடுப்பில் முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 200 கோடி டோஸ் மைல்கல்லை முன்னிட்டு தடுப்பூசி செலுத்திய மக்களுக்கு கடிதம் ஒன்றை இன்று (ஜூலை 20) எழுதியுள்ளார்.

அதில்,"உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை வேகமாகவும், மிகப் பரந்த அளவிலும் வெற்றியடை செய்ததற்கு உங்களைப் போன்றவர்களின் முயற்சிதான் காரணம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு நீங்கள் பங்களிப்பு அளித்ததற்கும், அத்தகைய உயிர்காக்கும் பணியில் முன்னணியில் இருந்ததற்காகவும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தடுப்பூசி செலுத்தியவர்கள், மருத்துவ பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் என அனைவரும் இந்த நாட்டை பாதுகாத்ததில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த 200 கோடி டோஸ் சாதனை என்பது நமது தேசத்தின் ஜனநாயக, கருணை மற்றும் சேவை சார்ந்த நெறிமுறைகள் ஆகியவற்றின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.

பெருந்தொற்று காலத்திலேயே அதை எதிர்த்து போராடி சாதித்துக்காட்டியதற்கு, வருங்கால தலைமுறைகள் நம்மைக்கண்டு மிகவும் பெருமையடையும். உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 200 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன - மத்திய சுகாதாரத்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.