ETV Bharat / bharat

ரூ. 49,600 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்

author img

By

Published : Jan 19, 2023, 7:42 AM IST

ரூ. 49,600 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்
ரூ. 49,600 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்

கர்நாடகா, மகாராஷ்டிராவில் ரூ. 49,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.

டெல்லி: கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இன்று (ஜனவரி 19) சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி ரூ. 49,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார். கர்நாடகாவில் ரூ.10,800 கோடி மதிப்பிலான திட்டங்களும், மகாராஷ்டிராவில் ரூ.38,800 கோடி மதிப்பிலான திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

அந்த வகையில், கர்நாடகாவின் யாத்கிரி மாவட்டத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டத்தின்கீழ் 117 எம்எல்டி திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 2,050 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2.3 லட்சம் வீடுகள் குழாய் மூலம் குடிநீர் வசதி பெறும்.

அதன்பின் நாராயண்பூர் கால்வாய் விரிவாக்க சீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த கால்வாய் மூலம் 10,000 கன அடி கொள்ளளவு தண்ணீரை மிச்சப்படுத்தி 4.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு நீர்ப்பாசனம் வழங்க முடியும். இதன் மூலம் கலபுர்கி, யாதகீர், விஜய்பூர் மாவட்டங்களின் 560 கிராமங்களில் உள்ள 3,00,000 விவசாயிகள் பயனடைவார்கள். இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு சுமார் 4,700 கோடி ரூபாயாகும்.

இதேபோல் சூரத்-சென்னை விரைவுச்சாலையின் ஒரு பகுதியாக ரூ.2,000 கோடி மதிப்பில் பசுமை வழிச்சாலை திட்டம் தொடங்கி வைக்கிறார். இந்த சாலை குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களை இணைக்கிறது. அதன்பின் மாலையில் மும்பை செல்லும் பிரதமர் மோடி, 12,600 கோடி ரூபாய் மதிப்பில் மும்பை மெட்ரோ ரயில் தடம் 2ஏ மற்றும் 7யை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது மும்பை 1 மொபைல் செயலியையும் தொடங்கி வைக்கிறார்.

மெட்ரோ பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மலாட், பந்தப், வெர்சோவா, கத்கோபர், பாந்த்ரா, தாராவி, வோர்லி ஆகிய இடங்களில் 17,200 கோடி ரூபாய் செலவில் 7 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மும்பையில் 3 மருத்துவமனைகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து, 6,100 கோடி ரூபாய் மதிப்பில் மும்பையில் 400 கிலோமீட்டர் தூர சாலைத் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான மறுசீரமைப்புப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின்கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் தொகையை விடுவிக்கிறார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பிரமிப்பை அளிக்கிறது - சேகுவேராவின் மகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.