"ஒரே பாரதம் உன்னத பாரதம்"- தமிழ்நாடு சொந்த ஊரை போல் உணர்த்தும் - கேலோ இந்தியா தொடக்க விழாவில் மோடி பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 19, 2024, 10:52 PM IST

Etv Bharat

அன்பான மக்கள், அழகான மொழி, கலாசாரம், உணவு பாரம்பரியம் என அனைத்தையும் பார்க்கையில் தமிழ்நாடு சொந்த ஊரில் இருப்பதை போன்று உணர்த்தும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

சென்னை : சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பொதிகை சேனலை டிடி தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார்.

பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமாக பிரசார் பாரதியின் கீழ் இயக்கும் தூர்தர்ஷன் பொதிகை தொலைகாட்சியில், புதிய தொடர்கள், புதிய நிகழ்ச்சிகள், புதிய வடிவமைப்பில் செய்திகள் ஆகியவற்றுடன் இன்று (ஜன. 19) முதல் டிடி தமிழ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு தொடங்கி உள்ளது.

புதிய அம்சங்களுடன் டிடி தமிழ் தொலைக்காட்சியை தொடங்குவதற்காக பிரசார் பாரதி சார்பில் 39 கோடியே 71 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஒளிபரப்பு துறையில் 8 மாநிலங்களுக்கான 12 ஆகாஷ்வானி எப்.எம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மேலும் புதிதாக 26 எப்.எம் டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள சென்னை வந்து உள்ள அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற ஒருமித்த உணர்வை அனைவரிடம் இருந்து ஒரே நேரத்தில் காண முடிவதாக பிரதமர் மோடி கூறினார். அன்பான தமிழக மக்கள், அழகான தமிழ் மொழி, கலாசாரம் உணவு பாரம்பரியம் என அனைத்தையும் உங்கள் சொந்த ஊரில் இருப்பதை போன்றே உணர்த்தும் என்று பிரதமர் கூறினார்.

கேலோ இந்தியா விளையாடுகள், இளையோர் விளையாட்டுகள், கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள் மற்றும் கேலோ இந்தியா பாரா விளையாட்டுகள் மூலம் விளையாடுவதற்கு மற்றும் அதிதீறன் வாயந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உலகிற்கு வெளிக் கொணரும் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக பிரதமர் மோடி கூறினார்.

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிக்கான இலச்சினையாக வேலு நாச்சியாரை வைத்து இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். விளையாட்டுத் துறையில் சம்பியன்களை உருவாக்கும் பூமியாகத் தமிழ்நாடு திகழ்வதாகவும் விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு முதல் பள்ளிகள் அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு ஜனவரி 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

நடப்பு தொடரில் இந்தியாவினை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஏறத்தாழ 5 ஆயிரத்து 500 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் எல். முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு தனி விண்வெளி மையம் - அடுத்த ஆண்டு பாரதிய விண்வெளி மைய பணி துவக்கம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.