ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து- சட்டப்பேரவை தேர்தல்- மோடி கூட்டத்தில் காங்கிரஸ் 5 கோரிக்கை!

author img

By

Published : Jun 24, 2021, 10:50 PM IST

PM Narendra Modi meets with 14 political leaders of J&K
PM Narendra Modi meets with 14 political leaders of J&K

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காஷ்மீர் தலைவர்களை முதல் முறையாக சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் சார்பில் மீண்டும் மாநில அந்தஸ்து, சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் காஷ்மீர் தலைவர்களுடன் வரலாற்று சிறப்புமிக்க கூட்டம் ஒன்றை இன்று (ஜூன் 24) நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆஸாத், தாதா சந்த் கா மிர், தேசிய மாநாட்டு கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி சார்பில் அல்தாஃப் புஹாரி, மக்கள் மாநாடு கட்சி சார்பில் சஜ்ஜாத் லோன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்ஒய் தாரிகாமி, தேசிய சிறுத்தைகள் கட்சி சார்பில் பீம் சிங் மற்றும் பாஜக தலைவர்கள் ரவீந்தர் ரெய்னா, நிர்மல் சிங், கவிந்தர் குப்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு அந்தஸ்து நீக்கம்

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்ட பின்னர் மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் நடத்திய முதல் கூட்டம் இதுவாகும்.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் தலைவர்களின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் கேட்டுள்ளார். அவர்கள் நேர்மையான கருத்துகளை பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்டெடுப்பதில் உறுதி

இந்தச் சந்திப்புக்கு பின்னர், பாஜகவின் ரவீந்தர் ரெய்னா செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி குறித்து நரேந்திர மோடி பேசினார்” என்றார். ஜம்மு-காஷ்மீர் அப்னி கட்சியைச் சேர்ந்த அல்தாஃப் புகாரி கூறுகையில், “பேச்சுவார்த்தை இன்று ஒரு நல்ல சூழ்நிலையில் நடைபெற்றது. அனைத்து தலைவர்களின் கருத்துகளையும் பிரதமர் மோடி கேட்டார். சட்டப்பேரவை தேர்தல் குறித்து உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தை மீட்டெடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.

காங்கிரஸ் கோரிக்கை

காங்கிரஸ் பிரதிநிதி குலாம் நபி ஆசாத் கூறுகையில், “நாங்கள் கூட்டத்தில் 5 கோரிக்கைகளை வைத்திருந்தோம். அவை, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, சட்டப்பேரவை தேர்தல், பண்டிட்கள் மறுகுடியமர்த்துதல், அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் குடியேற்ற விதிகள் ஆகும்.

தொடர்ந்து, மக்கள் மாநாட்டுத் தலைவர் சஜ்ஜாத் லோன், “கூட்டம் மிகவும் மரியாதைக்குரிய முறையில் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு புதிய திட்டங்கள் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: தொழுகை முடிந்து வீடு திரும்பிய காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.