ETV Bharat / bharat

அகமதாபாத் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்

author img

By

Published : Mar 9, 2023, 11:10 PM IST

4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது.

அகமதாபாத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 9) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முன்னதாக இரு நாட்டு பிரதமர்களும் பிரத்யேக வாகனத்தில் மைதானத்தில் வலம் வந்தனர். அப்போது உற்சாக குரல் எழுப்பி, ரசிகர்கள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து போட்டிக்கான தொப்பியை கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்துக்கு, அந்நாட்டின் பிரதமர் ஆல்பனீஸூம் வழங்கினார்.

பின்னர் இரு அணி கேப்டன்களும், வீரர்களை தங்கள் நாட்டு பிரதமர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இதைத் தொடர்ந்து இருநாட்டு பிரதமர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் ஆகியோர் ஆட்டத்தை கண்டு ரசித்தனர்.

ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்: டிராவிஸ் ஹெட், கவாஜா ஜோடி ஆட்டத்தை தொடங்கிய நிலையில், 32 ரன்கள் எடுத்திருந்த போது ஹெட் ஆட்டமிழந்தார். லபுஷேன் 3, கேப்டன் ஸ்மித் 38, ஹேண்ட்ஸ் கோம்ப் 17 ரன்களில் பெவிலியன் திரும்பினர். சிறப்பாக விளையாடிய கவாஜா சதம் விளாசி அசத்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 49 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்களும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த தொடரில் நாக்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டெல்லியில் நடந்த 2-வது ஆட்டத்தில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. பின்னர், இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

4வது போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். அதன்படி, ஜூன் 7ம் தேதி லண்டனில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும்.

இதையும் படிங்க: வின்டேஜ் ஸ்கூட்டரில் ரெய்டு - தாயின் ஆசையை நிறைவேற்றும் 80’ஸ் கிட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.