ETV Bharat / bharat

காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கிவைக்கிறார்

author img

By

Published : Nov 18, 2022, 8:02 PM IST

PM Modi to inaugurate month-long 'Kashi Tamil Sangamam' in Varanasi
PM Modi to inaugurate month-long 'Kashi Tamil Sangamam' in Varanasi

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஒரு மாதகால காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நாளை முறைப்படி தொடங்கிவைக்கிறார்.

லக்னோ: உத்தரப் பிரசேத்தின் வாரணாசியில் நடைபெறும் ஒருமாத நிகழ்ச்சியான காசி-தமிழ் சங்கமத்தை நாளை(நவம்பர் 19) பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கிவைக்கிறார். நவம்பர் 17ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, டிசம்பர் மாதம் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான பண்டைய தொடர்புகளை புதுப்பித்துக் கொள்ளும் விதமாகவும், இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு வாரணாசியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். முன்னதாக, காசி- தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் மற்றும் உத்தரப் பிரதேச அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசின் கலாச்சாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவுப்பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகள் உத்தரப்பிரதேச அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இரு மாநிலத்தைச் சேர்ந்த கல்வி வல்லுநர்கள், மாணவர்கள், தத்துவஞானிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரை ஒருங்கிணைத்து அவர்களின் அறிவாற்றலை மேம்படுத்துவதுடன் கலாச்சாரம் மற்றும் கற்றல் குறித்த புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில், இந்த சங்கம நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்திய அறிவாற்றல் முறையின் அடித்தளத்தை நவீன முறையிலான அறிவாற்றலுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தேசிய கல்விக் கொள்கை 2020இன் முக்கிய அம்சத்தைக் கருத்தில் கொண்டு இத்தகைய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இப்பணியை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி), சென்னை மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொள்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆன்மீகவாதிகள், தொழில்முனைவோர் உள்ளிட்ட 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வாரணாசிக்கு 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பிரதிநிதிகள் உள்ளூர் மக்கள், வர்த்தகர்கள் மற்றும் தங்கள் துறை சார்ந்த வல்லுநர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.

இவர்கள் அயோத்தி மற்றும் பிரயாக்ராஜ் பகுதிகளை பார்வையிடுவதுடன் தமிழ்நாடு மற்றும் காசி பகுதியை சார்ந்த கல்வி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர். இதற்காக சுமார் 200 மாணவர்களைக் கொண்ட முதல் பிரதிநிதிகள் குழு நவம்பர் 17ஆம் தேதி சென்னையிலிருந்து ரயில் மூலம் காசிக்கு புறப்பட்டது. இந்த ரயில் பயணத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கிவைத்தார். காசியில் நடைபெறவுள்ள தொடக்கவிழாவில் தமிழ்நாடு பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார். தமிழ் திரையுலக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த தொடக்கவிழாவில் புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: வாரணாசி: பாரதியாரின் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.