ETV Bharat / bharat

பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு ஒதுக்கீடு அதிகரிப்பு - பிரதமர் மோடி

author img

By

Published : Feb 26, 2022, 6:51 PM IST

PM Modi
PM Modi

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், மருத்துவக் கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு தொடர்பான சேவைகளுக்கு பட்ஜெட்டில் கணிசமான அளவுக்கு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

அன்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கு தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பங்கேற்று பேசிவருகிறார். இன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்த பிரதமர் மோடி உரையாற்றினார். பட்ஜெட் தொடர்பாக பிரதமர் பங்கேற்கும் ஐந்தாவது இணையவழிக் கருத்தரங்கு இதுவாகும்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் சுகாதாரத் துறையினருக்குப் பாராட்டு. இந்த இயக்கம் இந்தியாவின் சுகாதார சேவை முறை பற்றிய திறன் மற்றும் இயக்க ரீதியான தன்மையை நிலைநாட்டியுள்ளது. அனைவருக்குமான, முழுமையான சுகாதாரத்துறையை ஏற்படுத்தும் முயற்சிகள் அவசியம். அதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.

முதலாவதாக, நவீன அறிவியல் தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளங்களை விரிவுபடுத்துவது. இரண்டாவதாக, ஆயுஷ் போன்ற பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்தி, அவற்றை சுகாதார முறையில் தீவிரமாக ஈடுபடுத்துவது. மூன்றாவதாக, நவீன மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் மூலமாக, நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வது.

சுகாதாரச் சேவைகளின் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்களின் திறனை உருவாக்கவும் நாங்கள் முயன்று வருகிறோம். எனவே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், மருத்துவக் கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு தொடர்பான சேவைகளுக்கு பட்ஜெட்டில் கணிசமான அளவுக்கு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்று காலத்தில் தொலை மருத்துவம் மற்றும் தொலை தூர மருத்துவ வசதியின் ஆக்கபூர்வமான பங்கு வகித்தது. நகர்ப்புறத்துக்கும், கிராமப்புறத்துக்கும் இடையிலான சுகாதார அணுக்க பாகுபாட்டை இந்த தொழில்நுட்பங்கள் குறைக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும், 5ஜி கட்டமைப்பு மற்றும் கண்ணாடி இழை கட்டமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் தனியார் துறையினர் தங்களது பங்களிப்பை அதிகரிக்க முன்வர வேண்டும். ஆயுஷ் மருத்துவத்தின் சிறந்த தீர்வுகளை, நமக்காகவும், உலகத்துக்காகவும் எவ்வாறு உருவாக்குவது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது’’ என்றார்.

இதையும் படிங்க: சமையலறையில் கண்ணாடி பொருள்களை வைக்கலாமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.