ETV Bharat / bharat

குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு - புதுச்சேரி ஆரியூர் மக்கள் சாலை மறியல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 8:37 PM IST

மூன்று மணி நேர சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
புதுச்சேரி அரியூரில் குடிநீரில் கலந்த கழிவுநீர்

Puducherry protest: புதுச்சேரி அரியூர் கிராமத்தில் குடிதநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரம் நடைபெற்ற மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி அரியூரில் குடிநீரில் கலந்த கழிவுநீர்

புதுச்சேரி: அரியூர் கிராமத்தில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் நாகப்பட்டினம் இடையே நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை புதுச்சேரி எல்லைக்குட்பட்ட மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார் கோயில், அரியூர், பங்கூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்கிறது.

இந்த நெடுஞ்சாலை பணிகளுக்காக சாலையோரம் இருந்த கடைகள், வணிக வளாகங்கள், வீடுகள் ஆகியவை அகற்றி அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில் அரியூர் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும்போது அப்பகுதி மக்களுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதனால் அரியூர் விஜயலட்சுமி நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு தண்ணீர் வராமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி மக்கள் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வில்லியனூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படிங்க: பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் செயலிழந்த சிறுமிக்கு வெற்றிகரமாக டயாலிசிஸ் சிகிச்சை.. தஞ்சை அரசு மருத்துவர்கள் அசத்தல்!

மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்க துவங்கிய நாள் முதல் இப்பகுதியில் வசிக்கும் நாங்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். தற்போது குடிநீர் விநியோக குழாய் உடைந்திருப்பதால் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். மேலும் இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை, ஆகையால் நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் போலீஸார் எங்களை கைது செய்வதாக மிரட்டுகின்றனர். நீங்கள் அதிகாரிகளை பாருங்கள் என்று கூறுகின்றனர். எங்களுக்கு யாரை தெரியும் நாங்கள் சென்று பார்ப்பதற்கு” என மக்கள் புலம்பினர்.

மேலும் அவர்கள் கூறுகையில், “உடைக்கப்பட்ட குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து செல்கிறது. இதனால் மக்கள் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகின்றனர். மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்பவர்கள் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே எங்கள் கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை அடுத்து போலீசார் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மூன்று மணி நேரமாக சாலை மறியல் போராட்டம் தொடர்ந்ததால் அந்த வழியாக சென்ற பேருந்து லாரி உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிங்க: "தமிழக காங்கிரஸின் தலைவராக தான் நினைப்பது பேராசை" - சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.