ETV Bharat / bharat

அதானி குழும விவகாரம் - நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

author img

By

Published : Feb 2, 2023, 1:23 PM IST

Opposition
Opposition

அதானி குழுமம் குறித்த ஹிண்டேன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லி: அதானி குழுமம் குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டேன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், அதானி குழுமம் முறைகேடு செய்து பங்குச்சந்தையில் தனது நிறுவனத்தின் பங்குகளை உயர்த்தியதாகவும், பல வெளிநாட்டு நிறுவனங்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போலியான நிறுவனங்களை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்ததாகவும் குறிப்பிட்டப்பட்டிருந்தது. இந்த ஆய்வறிக்கையின் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கெளதம் அதானியின் அதானி குழுமம் மீதான இந்த பகீர் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் இதுவரை வாய்திறக்கவில்லை.

இந்த நிலையில், இன்று(பிப்.2) நாடாளுமன்றத்தில் ஹிண்டேன்பர்க் அறிக்கை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ், ஆம்ஆத்மி, பாரத ராஷ்டிர சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் முடிவு செய்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி எம்பிக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறும்போது, "அதானியின் மோசடிகளும், முறைகேடுகளும் மலைபோல் குவிந்துள்ளன. இதனால் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர். எல்ஐசி, எஸ்பிஐ ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் அதானி குழுமத்திற்கு கடன் கொடுத்துள்ளதால், எல்ஐசி மற்றும் எஸ்பிஐயில் முதலீடு செய்தவர்களும் கவலையில் உள்ளனர். இந்த பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும்.

இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறை, சிபிஐ எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறது? என்பதை நிதியமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வளவு பெரிய ஊழல் குறித்து அரசு ஏன் மெளனம் காக்கிறது? - கௌதம் அதானியின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யும்படி பிரதமர் மோடிக்கு ஆம்ஆத்மி கடிதம் எழுதியுள்ளது. மற்ற தொழிலதிபர்களைப் போல அதானியும் நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டால் அந்நிறுவனத்தில் முதலீடு செய்த கோடிக்கணக்கான மக்கள் என்ன செய்வார்கள்? " என்று கேள்வி எழுப்பினார்.

ஹிண்டேன்பர்க் அறிக்கை குறித்தும், அதானி குழும பங்கு சரிவு குறித்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரலெழுப்பும் என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி மனோஜ் திவாரி கூறும்போது, "இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். அதை அரசு ஏற்கவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுப்போம். இது நாட்டின் ஒட்டுமொத்த ஒழுங்குமுறை அமைப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது" என்றார்.

இதையும் படிங்க: "முதலிட்டாளர்கள் நலன் தான் முக்கியம்" - கவுதம் அதானி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.