ETV Bharat / bharat

ஜல்லிக்கட்டுக்குத் தடையில்லை - உச்ச நீதிமன்றம்

author img

By

Published : May 18, 2023, 11:33 AM IST

Updated : May 18, 2023, 2:01 PM IST

Etv Bharat
Etv Bharat

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி: ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களுடைய பாரம்பரியமான விளையாட்டாகும். இதனை ஏறுதழுவுதல் என்றும் அழைப்பர். பெரும்பாலும் ஜல்லிக்கட்டு மற்றும் கால்நடை சார்ந்த போட்டிகளான மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, மாட்டு வண்டி பந்தயம் ஆகியன, தமிழ்நாட்டில் பொங்கலை ஒட்டி கொண்டாடப்படுகின்றன.

இதேபோல், ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமான கலாசார விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் கம்பளா என்னும் எருதினைத் துரத்திக்கொண்டு, வயல் வெளிகளில் ஓடிக்கடக்கும் போட்டியும் , மகாராஷ்டிராவின் நடத்தும் மாட்டு வண்டி பந்தயங்களும் தனித்துவமானவையாகத் திகழ்கிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய போட்டிகளில், கால்நடைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அப்போட்டிகளை நடத்த தடைகோரியும், உச்ச நீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட பல்வேறு விலங்கின ஆர்வல அமைப்புகள் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தன.

இந்நிலையில் இதுதொடர்பாக நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்ததது. இந்நிலையில் இதுதொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, “ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்றும், காளைகளை வற்புறுத்தி போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர்” என்றும் விலங்குகள் நல அமைப்புகளால் வாதிடப்பட்டது.

இதையடுத்து, “ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம் சார்ந்த நிகழ்வு. பாரம்பரியம், இறை வழிபாடு அம்சங்களுடன் தொடர்புடையது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்ததால், விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு வாதிட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டபின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என ஒருமனதாக தீர்ப்பளித்தது. ஜல்லிக்கட்டுப் போட்டியை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்புச் சட்டங்கள் அனைத்தும் செல்லும் எனவும் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதே, நடைமுறை மகாராஷ்டிராவின் மாட்டு வண்டி பந்தயங்களுக்கும், கர்நாடக மாநிலத்தின் கம்பளா விளையாட்டுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிட்டு தீர்ப்பளித்தது. இதன்மூலம், மகாராஷ்டிர மாநிலத்தின் சிறப்புச் சட்டமும், தமிழ்நாட்டின் சிறப்புச் சட்டமும் செல்லுபடி ஆகும் என உறுதிபடுத்தியுள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது மட்டுமல்லாமல், அனைத்து மறுஆய்வு மனுக்கள் மற்றும் இதர மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்குத் தடையில்லை என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் போட்டிகளை நடத்தும்போது, மாநில அரசு நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு விதிகளைப்பின்பற்றி மாவட்ட ஆட்சியர் இப்போட்டிகளை நடத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின், வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பணி நிரவல் கலந்தாய்வில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பின்பு நடத்தக் கோரிக்கை!

Last Updated :May 18, 2023, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.