ETV Bharat / bharat

New Parliament: புதிய நாடாளுமன்ற திறப்பு விழா தொடங்கியது.. முக்கிய அம்சங்கள் என்ன?

author img

By

Published : May 28, 2023, 8:19 AM IST

புதிய பாராளுமன்ற கட்டடம்
புதிய பாராளுமன்ற கட்டடம்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்கும் விழா காலை 7.30 மணிக்கு யாக பூஜையுடன் தொடங்கிய நிலையில் பல சமய பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.

டெல்லி: புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்வு பல சமய பிரார்த்தனைகளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த திறப்புவிழாவில் பாஜக, கூட்டனிக் கட்சிகள் என 25 கட்சிகளின் முதலமைச்சர்கள், பிரதிநிதிகள், அமைச்சர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

புதிய பாராளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில், நான்கு மாடிகளுடன், 64,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த கட்டடத்தில் அறிவு வாயில், சக்தி வாயில், கடமை வாயில் என பொருள்படும் கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்ம துவார் என மூன்று முக்கிய வாயில்கள் உள்ளன.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, டில்லி லுடியன்ஸ் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதிய டெல்லி மாவட்டம் முழுவதிலும் வாகனங்களின் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ள காவல்துறை ஏற்கனவே போக்குவரத்து அறிவுரையையும் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டடம் உயர் பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ளது. கூடுதல் பாதுகாப்புடன், சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஏறக்குறைய 20 கட்சிகள் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்யக் கோரி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள், இன்று திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் முன்பு பெண்கள் மகா பஞ்சாயத்து எனும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ள 'பெண்கள் மகா பஞ்சாயத்துக்கு' அனுமதி வழங்கப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், பாராளுமன்ற கட்டடத்திற்கு அருகில் போதிய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திறப்புவிழா அட்டவணை:

காலை 7:30 மணி - மகாத்மா காந்தி சிலை அருகே உள்ள பந்தலில் நடைபெறும் பூஜை உடன் திறப்பு விழா துவங்கி நடைபெற்று வருகிறது.

காலை 8:30 - செங்கோல் நாடாளுமன்ற கட்டடத்தின் புதிய மக்களவை அறையில் வைக்கப்படும். இது மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் நிறுவப்படும்.

காலை 9:30 மணி – நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் மத பிரார்த்தனை விழாவில் சமய அறிஞர்கள் மற்றும் குருமார்கள் கலந்து கொள்வார்கள்.

மதியம் 12 மணி - நாடாளுமன்றம் தொடர்பான இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டு, முக்கிய பிரமுகர்கள் உரையாற்றுவார்கள்.

மதியம் 1 மணி – புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவு கூறும் வகையில் 75 ரூபாய் நாணயம் மற்றும் முத்திரையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.

பிற்பகல் 1:10 - பிரதமர் நரேந்திர மோடி தனது உரையாற்றுகிறார்.

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகளின் பட்டியல்

பாஜக உட்பட 18 கூட்டணி கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்கின்றன. கூட்டணியில் இல்லாத 5 கட்சிகள் பங்கேற்கின்றன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20 கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Parliament: புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறப்பு.. பழைய நாடாளுமன்ற கட்டடம் என்ன ஆகும்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.