ETV Bharat / bharat

சிறுவன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை - நீதிமன்றம் அதிரடி!

author img

By

Published : May 29, 2023, 10:58 PM IST

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

court
நீதிமன்றம்

மதுரா: உத்தரபிரதேச மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனை, ஏப்ரல் 8ம் தேதி திடீரென காணவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதையடுத்து ஏப்ரல் 9ம் தேதி சிறுவனின் தந்தை, தனது மகனை காணவில்லை என சதர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சயீஃப் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாகவும், மகனை அவர் கடத்தி சென்றிருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். காணாமல் போன சிறுவனை தீவிரமாக தேடினர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, காணாமல் போன சிறுவனை, சயீஃப் அழைத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சயீஃபை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் அவரை சுற்றிவளைத்த போலீசார் விசாரணை நடத்திய போது, சிறுவனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், சம்பவத்தன்று சிறுவனை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்ற சயீஃப், பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுவன் அலறியுள்ளான். தாம் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் யாரிடமும் சொல்லி விடக்கூடாது என மிரட்டியுள்ளார் சயீஃப். ஆனாலும் சிறுவனை கொலை செய்ய சயீஃப் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. அதன்படி இரும்பு ஸ்ப்ரிங்கால், சிறுவனை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சயீஃப், சடலத்தை மறைவான பகுதியில் வீசிவிட்டு தப்பியது போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து கொலையாளி மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குற்றவாளி சயீஃப் மீது, ஏப்ரல் 28ம் தேதி, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மே 2ம் தேதி, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 14 சாட்சிகள், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். வாதங்களை விசாரித்த நீதிமன்றம், மே 26ம் தேதி குற்றவாளி சயீஃப் மீதான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (மே 29) நீதிபதி ராம்கிஷோர் யாதவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சயீஃப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். மேலும், குற்றவாளிக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் அறிவித்தார். இதன் மூலம் கொலை வழக்கில் 15 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கி, போக்சோ சிறப்பு நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீர் யாசின் மாலிக்கிற்கு தூக்கு? என்.ஐ.ஏ. மனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.