ETV Bharat / bharat

புதுச்சேரி குபேர் மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு.. 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல்!

author img

By

Published : Jul 14, 2023, 10:29 PM IST

traders protest
குபேர் அங்காடி

புதுச்சேரியில் உள்ள குபேர் மார்க்கெட் எனப்படும் பெரிய மார்க்கெட் கட்டடம் இடிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் சார்பில் நள்ளிரவில் நோட்டீஸ் ஒட்டியதை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் பெரிய மார்க்கெட் கட்டடம் இடிப்பதை கண்டித்து 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல்

புதுச்சேரி: பெரிய மார்க்கெட் குபேர் அங்காடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முழுமையாக அகற்றி புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இங்கு மளிகைப் பொருள்கள், காய்கறி வகைகள், பழ வகைகள், மீன், கறி, பூக்கடைகள், இரும்பு பொருட்கள் விற்கும் கடைகள், அடிக்காசு கடைகள் என 1400க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த கடைகளில் ஒட்டு மொத்தமாக நாலாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அரசு திடீரென ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அங்காடியை முழுமையாக இடித்துவிட்டு புதிய மார்க்கெட் கட்டுவதற்கு 36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 8 மாதங்களில் கட்டுமானப் பணியை முடித்து வியாபாரிகளிடம் கடைகளை ஒப்படைப்பதாகவும் கூறி வியாபாரிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக மார்க்கெட்டை காலி செய்து கொண்டு அரசு சொல்லும் இடத்தில் தற்காலிக கடை அமைத்துக் கொள்ளும்படி, வலியுறுத்தி வருகிறார்கள். அரசின் இந்த முடிவினை ஒட்டுமொத்த வியாபாரிகள் அனைவரும் ஏற்கவில்லை, இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 13) அனைத்து கடைகளும் மூடிய பிறகு இரவு 11 மணிக்கு மேல் நகராட்சி சார்பில் அனைத்து கடைகளிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுவதற்காக இந்த இடங்கள் இடிக்கப்பட உள்ளதாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். இன்று காலை கடை வியாபாரிகள் கடையை திறக்க வந்தபோது நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேரு வீதியில் கடைகளை அனைத்தையும் அடைத்து திடீரென மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அனைவரும் ஊர்வலமாகச் சென்று ராஜா தியேட்டர் சிக்னலில் மீனவ பெண்கள் உட்பட அனைத்து பெரியமார்க்கெட் வியாபாரிகள் 500-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நகரப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனாலும் வியாபாரிகள் மறியலைக் கைவிட மறுப்பு தெரிவித்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியிலில் ஈடுபட்ட வியாபாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகளை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் ஆத்திரமடைந்த மற்ற வியாபாரிகள் மற்றும் மீனவ பெண்கள் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து போலீசார் அனைவரையும் அப்புறப்படுத்தி முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Chandrayaan 3: நிலவை நோக்கிய பயணம்.. சாதிக்கும் சந்திரயான்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.