ETV Bharat / bharat

ஆறுதல் கூற சென்ற எம்எல்ஏ-வுக்கு அடி; கர்நாடகாவில் பரபரப்பு

author img

By

Published : Nov 21, 2022, 11:04 PM IST

கர்நாடகாவில் எம்எல்ஏ- வை தாக்கிய கிராம மக்கள்
கர்நாடகாவில் எம்எல்ஏ- வை தாக்கிய கிராம மக்கள்

கர்நாடகா மாநிலம், முடிகெரே தொகுதி எம்.எல்.ஏ.குமாரசாமி, ஆறுதல் சொல்ல சென்ற போது கிராம மக்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்மகளூரு: கர்நாடகா மாநிலம், முடிகெரே தொகுதி எம்எல்ஏ., குமாரசாமி, சிக்கமகளூரு மாவட்டம், ஹுல்லேமனே குண்டூர் கிராமத்திற்கு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லசென்ற போது கிராம மக்களால் தாக்கப்பட்டார்.

ஹுல்லேமனே குண்டூர் கிராமத்தில் நேற்று காலை 7:30 மணியளவில் ஷோபா என்ற 35 வயதுடைய பெண் காட்டு யானை தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர், இந்தச் சம்பவத்திற்குப்பின் எம்எல்ஏ குமாரசாமி மாலை 6 மணியளவில் கிராம மக்களுக்கு ஆறுதல் கூற கிராமத்திற்குச் சென்றுள்ளார்.

ஆனால் அங்கு, எம்.எல்.ஏ குமாரசாமிக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மக்கள் குமாரசாமியை கிராமத்தை விட்டு விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக எம்.எல்.ஏ., எம்.பி., குமாரசாமி, இன்று சிக்மகளூரில் செய்தியாளர்களிடம், கிராம மக்களால் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நேற்று மாலை 3.30 மணியளவில் அந்த கிராமத்தை அடைந்தேன். முன்னதாக கிராமத்தில் ஒரு கும்பல் காவலர்களைத் தாக்கியது, எனவே சற்று நிலைமையை அறிந்து வருமாறு காவல்துறையினர் கூறினர். ஆகையால் சிறிது நேரத்திற்கு பின்னரே இறந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றேன்.

அப்போது அந்த வீட்டில் இருந்த சில பெண்கள் என்னை தாக்கினர். உடனடியாக காவல்துறையினர் என்னை அங்கிருந்து செல்ல பரிந்துரைத்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் என் மீதும், காவல் துறையினர் மீதும் தாக்குதல் நடத்தினர். என்னை செருப்பால் அடித்தனர்.

அனைவரின் கைகளிலும் தடி இருந்தது. மக்கள் என்னை ஒரு திருடனைப் போல துரத்தினார்கள். பின்னர் ஓடி வந்து ஜீப்பில் அமர்ந்தேன். ஜீப் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இது யானை தாக்குதலால் நடந்த சம்பவம் அல்ல, அரசியல் தாக்குதல்.

ஆறுதல் கூற சென்ற எம்எல்ஏ-வுக்கு அடி; கர்நாடகாவில் பரபரப்பு

நான் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சதி செய்து என் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நான் உட்பட அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து அரசிடம் புகார் அளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மங்களூரு ஆட்டோ வெடிவிபத்து எதிரொலி: தமிழ்நாடு எல்லையில் தீவிர சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.