ETV Bharat / bharat

Manipur Violence: பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் - முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம்!

author img

By

Published : Jul 20, 2023, 10:02 AM IST

Updated : Jul 20, 2023, 10:09 AM IST

Manipur riots women naked paraded video political leaders Condemned
Manipur riots women naked paraded video political leaders Condemned

மணிப்பூர் கலவரத்தில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி கலவரக்காரர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இம்பால் (மணிப்பூர்): மணிப்பூரில் பெரும்பான்மையாக வசித்து வரும் மெய்தீஸ் இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பழங்குடியின மானவர்கள் சங்கத்தினர் கடந்த மே மாதம் பேரணி ஒன்றினை நடத்தினர். அந்த பேரணியின்போது ஏற்பட்ட மோதல் சம்பவம் கலவரமாக மாறி தற்போது மெய்தீஸ் இன மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.

மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி, நாகா போன்ற பழங்குடியின மக்களுக்கும், பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்தீஸ் இன மக்களுக்கும் எற்பட்ட இந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான மத வழிபாட்டுத்தலங்களும், ஆயிரக்கணக்கான வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த இந்திய ராணுவமும், அசாம் ரைபிள் படையும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கலவரம் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில், ஜூலை 19 முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளி ஒன்று மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் கலவரத்தில் எடுக்கப்பட்டு இருக்கும் அந்த காணொலியில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, நூற்றுக்கணக்கான ஆண்கள் சூழ்ந்து கொண்டு அவர்களை தாக்குவது, பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது போன்றவை அந்த காணொலியில் இடம் பெற்றுள்ளது.

மணிப்பூர் கலவரத்தில் மே 4ஆம் தேதி அந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கலவரக்காரர்கள் அந்த இரண்டு பெண்களையும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. மணிப்பூரில் கலவரம் தீவிரம் அடையாமல் இருப்பதற்காக இணைய சேவை துண்டிக்கப்பட்டு இருந்தது. அதனால் இந்த காணொலி தாமதாக வெளிவந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கலவரக்காரர்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் வெளியில் தெரிய வெண்டும் என்பதற்காக இவ்வாறு காணொலியை வெளியிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்படும் இந்த வீடியோ வெளியானதில் இருந்து மலைபகுதிகளில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பூர்வகுடி பழங்குடியினர் தலைவர்கள் மன்றத்தின் (ITLF) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மே 4 அன்று காங்போக்பி மாவட்டத்தில் பெண்களை ஆண்கள் தொடர்ந்து துன்புறுத்தும் இழிவான செயலை அந்த காட்சி காட்டுகிறது. அதில் பெண்கள் அழுது புலம்புகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிகாட்டுவதற்காக வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர வேண்டும் என்பதே கலவரக்காரர்களின் முடிவு. மத்திய, மாநில அரசுகள், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் ஆகியவை இந்த குற்றத்தை உணர்ந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 20) சர்ச்சந்த்பூரில் நடைபெற உள்ள அணிவகுப்பின்போது குக்கி - ஜோ பழங்குடியினர் இந்த பிரச்னை குறித்து குரல் எழுப்ப முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் கண்டனம் தெரிவித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் முற்றிலும் மனம் உடைந்து திகைப்படைந்தது. நமது மனசாட்சி எங்கே? வெறுப்பும் விஷமும் மனித குலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்று, பச்சாதாபமும் மரியாதையும் கொண்ட சமுதாயத்தை வளர்ப்பதற்கு உழைக்க வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்” என பதிவிட்டு உள்ளார்.

  • Absolutely heartbroken and appalled by the agonising violence unleashed on women in #Manipur. Where is our collective conscience? The hate and venom are uprooting the very soul of humanity. We must stand united against such atrocities and work towards fostering a society of…

    — M.K.Stalin (@mkstalin) July 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமரின் அமைதி மற்றும் செயலற்ற தன்மை மணிப்பூரை அராஜகத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணம் தாக்கப்படும் போது INDIA அமைதியாக இருக்காது. மணிப்பூர் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம். சமாதானம் ஒன்றே முன்னோக்கி செல்லும் வழி” என பதிவிட்டுள்ளார்.

  • PM’s silence and inaction has led Manipur into anarchy.

    INDIA will not stay silent while the idea of India is being attacked in Manipur.

    We stand with the people of Manipur. Peace is the only way forward.

    — Rahul Gandhi (@RahulGandhi) July 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து, விவாதிக்க கோரி ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் மௌனம் குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 10 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு பணியமர்த்தி கொடுமை புகார்.. பெண் விமானி, கணவர் கைது!

Last Updated :Jul 20, 2023, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.