ETV Bharat / bharat

ஹிமாச்சலத்தில் கனமழை, நிலச்சரிவால் 55 பேர் உயிரிழப்பு! சிம்லாவில் பயங்கர நிலச்சரிவு!

author img

By

Published : Aug 16, 2023, 11:56 AM IST

Himachal
ஹிமாச்சலத்தில் கனமழை

Himachal landslide: ஹிமாச்சல பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கனமழை, மேக வெடிப்பு, நிலச்சரிவு போன்றவற்றால் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சோலன், சிம்லா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வீடுகள் இடிந்தன. சாலைகள் சேதமடைந்தன. பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த 13ஆம் தேதி சோலன் மாவட்டத்தில் ஜடோன் என்ற கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இரண்டு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில், அந்த வீடுகளில் வசித்து வந்த 7 பேர் இடிபாடுகளில் புதைந்து உயிரிழந்தனர். இதேபோல், ஹிமாச்சலபிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில் ஹிமாச்சலபிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சிம்லாவில் சம்மர் ஹில் பகுதியில் நேற்று(ஆகஸ்ட் 15) கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல், சிம்லாவின் கிருஷ்ணா நகர் பகுதியில் நேற்று (ஆகஸ்ட். 15) ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 7 வீடுகள் இடிந்து விழுந்தன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்புப் படையினர் நிலச்சரிவு நடந்த இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணிக்காக விமானப்படையின் மீட்பு ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்களும் சென்றுள்ளனர்.

சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிம்லா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் காந்தி தெரிவித்தார். அதிகாரி சஞ்சீவ் காந்தி கூறுகையில், "நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். அனைத்து மீட்புப் படைகளும் இங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 15 வீடுகளில் இருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவால் ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கிடப்படவில்லை" என்றார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களில் கனமழை, நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்றவற்றால் சுமார் 55 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடர் கனமழை, வெள்ளத்தின் பாதிப்பு தொடர்பாகவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாகவும் ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார்.

மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 400 சாலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை உடனடியாக செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஹிமாச்சலில் மேக வெடிப்பு காரணமாக கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.