ETV Bharat / bharat

இந்தித் திணிப்பு கல்வித் துறையின் மறுமலர்ச்சி? மத்திய அமைச்சரை விளாசிய மதுரை எம்.பி!

author img

By

Published : Dec 27, 2022, 10:09 AM IST

Etv Bharat
Etv Bharat

இந்தி திணிப்பு கல்வித்துறையின் மறுமலர்ச்சி என்று பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் பேச்சுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை: இந்தி திணிப்பு 'கல்வித்துறையின் மறுமலர்ச்சி' என்று பேசிய மத்திய அமைச்சரின் பேச்சுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் "இந்தி சலகாகர் சமிதி" கூட்டத்தில் பேசும் போது இந்தித் திணிப்பை "கல்வித் துறையின் மறுமலர்ச்சி, மறு நிர்மாணம்" என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார். அவரே மொழி மக்களை இணைப்பது, வலிய திணித்தால் ஒழிய அது பிரிக்காது என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆணைகளுக்கு இணங்க இந்தி சல்காகர் சமிதியின் கூட்டம் உரிய இடைவெளிகளில் கூடுகிறது, அளவிடத்தக்க, புலப்படத்தக்க முன்னேற்றங்களையும் எட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதன் துணைக் குழுக்கள் கூட வேண்டும் என்றும் கூறியுள்ளார். எல்லா அறிவியல் இதழ்கள், ஆவணங்களும் தரமான இந்தி மொழி பெயர்ப்பு செய்யப்பட வேண்டும், அதற்கு தேர்ந்த நிபுணர்களை பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மாநில மொழிகளின் வளர்ச்சியையும் போகிற போக்கில் பேசியுள்ளார்.

  • இந்தித் திணிப்பு "கல்வித் துறையின் மறுமலர்ச்சி”

    ஒன்றிய அமைச்சரின் ஆணவ பேச்சு.

    வேலை, வருமானம் என்று சுருங்கி விடக் கூடியதல்ல மொழி! அதையும் கடந்த பண்பாட்டு உரிமை.

    அறிவியலை வளர்ப்பதே உங்கள் துறை. அதை விடுத்து இந்தியை திணிக்க நினைப்பது அறிவியலும் அல்ல, அறிவார்ந்த செயலும் அல்ல. pic.twitter.com/pmoONDyi2d

    — Su Venkatesan MP (@SuVe4Madurai) December 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளை எல்லாம் பட்டியலிட்டு அவர்கள் எல்லாம் இந்தியில் பேசுவதையே விரும்புகிறார்கள், இந்தியில் வேலை செய்வதையும் ஊக்குவிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சரின் பேச்சு எந்த அளவிற்கு ஒன்றிய அரசு இந்தித் திணிப்பில் முனைப்பு காட்டுகிறார்கள் என்பதற்கு சாட்சியம். மாநில மொழிகளின் வளர்ச்சி பற்றியும் பெயருக்கு சேர்த்துப் பேசுவது வைக்கோல் கன்றுக் குட்டியை காட்டி பசுவை ஏமாற்றி பால் கறப்பது தவிர வேறொன்றுமில்லை.

அமைச்சரே! உண்மையிலேயே உங்களுக்கு எல்லா இந்திய மொழிகளையும் வளர்ப்பது என்றால் எட்டாவது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளையும் அலுவல் மொழிகள் என அறிவியுங்களேன்.இந்தி பரவல் "கல்வித் துறையின் மறுமலர்ச்சி, மறு நிர்மாணம்" என்று அமித்ஷா கூறியுள்ளதை அமைச்சர் வழி மொழிந்துள்ளார். யாருக்கு மறு மலர்ச்சி? யாருக்கு மறு நிர்மாணம்? இந்தியாவின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கிற வண்ணம் இந்திய மாநிலங்கள் ஏ, பி, சி என அலுவல் மொழி விதிகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளதே? எங்கு இந்தி கட்டாயம்? எங்கு கட்டாயமில்லை? எங்கு ஆங்கிலப் பயன்பாடு அவசியம்? என்றெல்லாம் அது பேசி இருக்கிறதே, அதை உங்கள் அரசு உணர்வு பூர்வமாக அமல் செய்கிறதா? இந்தியை மட்டுமே பேசுவது மறு நிர்மாணமா, தேசத்தின் பன்முகத் தனமையை ஓரளவேனும் பிரதிபலிக்கிற அந்த அலுவல் மொழி விதிகளை உடைக்கிற செயலா? தமிழ்நாடுக்கு அந்த அலுவல் மொழிகள் பொருந்தாது என்ற சிறப்பான இடம் இருப்பது உங்களுக்கு தெரியாதா

வட கிழக்கு மாநிலங்களில் நியமிக்கப்பட்ட இந்தி ஆசிரியர்கள் தொடரவில்லை என்ற உண்மையை அமைச்சர் மறுக்கவில்லை. ஏன் தொடரவில்லை என்பதை யோசிக்க வேண்டாமா? வழியத் திணித்தலின் விளைவு அல்லவா அது! அந்த மாநிலத்தின் இளைஞர்கள் சுற்றுலா துறையில் அதிகம் வேலை பார்ப்பதால் அவர்களுக்கு இந்தி பயன்படும் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரே! ஒரு மொழி தேவை என்றால் இயல்பாகவே அவர்கள் கற்றுக் கொள்வார்கள். எங்கள் சென்னை ரயில் நிலைய வாசலுக்கு வந்து பாருங்கள்! அங்கு இருக்கிற வாகன ஓட்டுனர்கள் இந்தி பயணிகளிடம் எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசுவதை பார்க்கலாம். நீங்களே ஒத்துக் கொள்கிற மாதிரி வடகிழக்கு மாநிலங்களில் நீங்கள் வாஜ்பாயி காலத்தில் போட்ட ஆசிரியர்கள் அங்கு தொடரா விட்டாலும் அந்த மாநிலத்து இளைஞர்கள் சுற்றுலா துறைக்குள் நிறைய வந்துதானே இருக்கிறார்கள்! அனுபவங்களில் இருந்து சரியான படிப்பினைகளை பெற வேண்டாமா? எப்படி தப்பாமல் தப்பான முடிவுகளுக்கே வருகிறீர்கள்!

வேலையோடும், வருமானத்தோடும் இணைக்கப்படும் போது மொழி தனது வளர்ச்சிக்கான பாதையை அதுவே அறிந்து கொள்கிறது என்று கூறுகிற அமைச்சரே! வேலை, வருமானம் என்று சுருங்கி விடக் கூடியதல்ல மொழி! அது பண்பாட்டோடு இணைந்தது; உரிமை சார்ந்த உணர்வு அது. 'மொழி இணைக்கும், பிரிக்காது அது திணிக்கப் பட்டாலொழிய' என்ற உங்கள் வார்த்தைகளையே திரும்ப உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த உண்மையைத் தெரிந்தே திணிப்பதுதான் உங்கள் அரசின் ஆணவம்.

அமைச்சரே, இந்தி அல்ல இந்தியா... இந்தியா என்பது மொழிப் பன்மைத்துவம் பூத்துக் குலுங்கும் தோட்டம்.அறிவியலை, தொழில் நுட்பத்தை வளர்ப்பதே உங்கள் இலாகா... அதை உங்கள் அமைச்சகம் பார்க்கட்டும்! இந்தியை திணிக்க நினைப்பது அறிவியலும் அல்ல, அறிவார்ந்த செயலும் அல்ல" என்று கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: ETV Bharat 2022 Roundup: பள்ளிக்கல்வித்துறையில் செய்த புதிய திட்டங்களின் தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.