திருவனந்தபுரம் : கேரளாவில் சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் பணியாற்றிய வந்தனா தாஸ் என்ற பெண் மருத்துவர், கடந்த வாரம் பணியில் இருக்கும் போது குத்திக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தீப் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அண்மையில் கொச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த இர்பான் என்ற மருத்துவர், சிகிச்சைக்காக வந்தவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகவும் டோயல் என்பவரை போலீசார் கைது செய்தனர். மாநிலத்தில் அடுத்தடுத்து மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது தாகுதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய வகையிலான அவசரச் சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்த அவசரச் சட்டத்தின் மூலம் மாநிலத்தில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள், சுகாதார நிலையங்களில் பணிபுரிபவர்கள், மருத்துவ நிறுவனங்களின் ஊழியர்கள் மீது உயிர்ச்சேதம் ஏற்படும் வகையில் தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் சுகாதாரப் பணியாளர்கள் அல்லது சுகாதார நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மீது வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது அல்லது தூண்டினால் குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அவசரச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், 2012 சட்டப் பிரிவில் மாநில அரசு திருத்தம் கொண்டு வந்து உள்ளது. இதற்கு முன் இந்த சட்டப் பிரிவின் படி சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல், அல்லது சுகாதார நிறுவனத்தின் பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 வருடங்கள் சிறைத் தண்டனையும், 50 அயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த சட்டத்தில் தான் தற்போது மாநில அரசு திருத்தம் கொண்டு வந்து உள்ளது.
இந்த திருத்தப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் பதியப்படும் வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்ற அமர்வுகள் அமைக்கப்படும் என்றும்; குறித்த நேரத்தில் இந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும்; ஆய்வாளருக்கு குறைந்த தரவரிசையில் உள்ள காவலர்கள் இந்த வழக்கினை விசாரிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் பாராமெடிக்கல் மாணவர்கள், சுகாதார நிலைய காவலர்கள், நிர்வாகப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டவர்களும் பாதுகாக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : Adani Case: அதானி முறைகேடு புகார் : 3 மாதங்களில் அறிக்கை அளிக்க செபிக்கு உச்ச நீதிமன்றம் கெடு!