உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரை நடவடிக்கைகளில் பிரதான கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன.
ஆளும் பாஜக அரசு நாள்தோறும் பல அறிவிப்புகளை மேற்கொண்டுவருகிறது. காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை முகமாக முன்னிறுத்தி 'பிரதிக்யா யாத்திரா என்ற யாத்திரையை தொடங்கியுள்ளது.
சமாஜ்வாதி கட்சியும் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை முன்னிறுத்தி விஜய் யாத்திரையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் பரப்புரையைத் தொடங்கும் விதமாக அக்டோபர் 26ஆம் தேதி உத்தரப் பிரதேசம் வருகிறார்.
அங்குள்ள அயோத்தியில் உள்ள ராம்ஜென்ம பூமியில் ராம் லல்லாவை வழிபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் புதிய ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குள் கோயில் திறக்கப்படும் என அறங்காவல் குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வேளாண் கடன் தள்ளுபடி, 20 லட்சம் அரசு வேலை - உ.பி மக்களுக்கு பிரியங்காவின் வாக்குறுதி