ராமநகரா: கர்நாடகா மாநிலத்தின் ராமநகரா மாவட்டத்தில் உள்ள சன்னாபாட்னா தாலுகாவிற்கு உட்பட்ட அரலாலுசந்திரா கிராமத்தில் லிங்கம்மா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூன் 28ஆம் தேதி அருகில் உள்ள வனப் பாதுகாவலர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.
அந்த புகார் கடிதத்தில், “கடந்த நான்கைந்து நாட்களாக எனது வீட்டின் அருகில் மயில் ஒன்று வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் 26 அன்று நான் எனது வீட்டின் பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது அருகே அந்த மயில் வந்தது. பின்னர், அது அதனுடைய அலகால் என்னைத் தாக்கியது.
இதனால் எனது உடலில் பயங்கரமான படுகாயம் ஏற்பட்டது. அப்போது மாலை நேரம் என்பதால், நான் எனது கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். பின்னர், மறுநாள் பிவி ஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டேன். எனவே, என்னை தாக்கி காயம் ஏற்படுத்திய மயில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்படி, அந்த மயிலை பிடித்து வனப் பகுதியில் விட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், இந்த புகார் கடிதத்தில் கிராம மக்கள் சிலரும் கையெழுத்திட்டிருந்தனர். அது மட்டுமல்லாமல், ஏராளமான மயில்கள் தங்களை தாக்குவதாக கிராம மக்கள் புகார் அளித்து உள்ளனர். மேலும், விவசாய நிலங்களில் உள்ள விதைகளை உண்டு சேதம் ஏற்படுத்துவதாக விவசாயிகளும் புகார் அளித்து உள்ளனர்.
அதேநேரம், அரலாலுசந்திரா பகுதியில் பல்வேறு வன விலங்குகளால் இடர்பாடு என புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், மயில் மீது புகார் வந்திருப்பது இதுவே முதல் முறை என வனத்துறை அலுவலர்கள் கூறி உள்ளனர். முன்னதாக, தக்ஷின கன்னடாவில் உள்ள கபடாவில் இருக்கும் பிரதான சாலையில் குதிரை ஒன்று சுற்றித் திரிவதாகவும், இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் காவல் நிலையத்தில் புகார்கள் வந்து உள்ளது.
பின்னர், காவல் நிலையத்துக்கு வந்த குதிரையின் உரிமையாளர், இனி தனது குதிரையால் எந்தவொரு தவறும் நிகழாது எனக் கூறி குதிரையை அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு அலெக்காடியில் நடைபெற்று உள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியிடம் சில்மிஷம்... மகளிர் ஆணையம் கடும் கண்டனம்!